/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறக்கும் வாகனங்கள்; பதறும் பொதுமக்கள்
/
பறக்கும் வாகனங்கள்; பதறும் பொதுமக்கள்
ADDED : செப் 08, 2025 10:44 PM

சூலுார்; திருச்சி ரோட்டில் இருந்து, பாப்பம்பட்டி செல்லும் ரோட்டில் அசுர வேகத்தில் லாரிகள் இயக்கப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சூலுார் திருச்சி ரோடு, பாப்பம்பட்டி பிரிவில் இருந்து பாப்பம்பட்டி செல்லும் ரோடு உள்ளது. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பாப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், சின்னக் குயிலி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல் குவாரிகளுக்கு சென்று வரும் கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் அதிகளவில் இயக்கப்படுகின்றன. லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் அசுர வேகத்தில் சென்று வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பாப்பம்பட்டி ரோட்டில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்குவாரி லாரிகள் அசுர வேகத்தில் செல்கின்றன. ஒதுங்க கூட இடமில்லாததால், நடந்து செல்வோர், இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் விபத்தில் சிக்குகின்றனர். கனரக வாகனங்களை வேகமாக இயக்குவோர் மீது போலீசாரும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.