/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய்யில் கலப்படம் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
/
பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய்யில் கலப்படம் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய்யில் கலப்படம் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய்யில் கலப்படம் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
ADDED : ஜன 03, 2026 05:33 AM

கோவை: பேக்கிங் செய்யப்படாத சமையல் எண்ணெய்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா எச்சரித்துள்ளார்.
சமையல் எண்ணெய்களில் அதிக கலப்படம் நடைபெறுவதாக, தொடர்ந்து எழுந்த புகாரின் அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன்பே, பேக்கிங் செய்யாமல் சில்லரையாக எண்ணெய் விற்பனை செய்வதை, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு தடை செய்துள்ளது.
இந்நிலையில், கோவையில் சில இடங்களில் தற்போதும் சில்லறை அளவில் பாத்திரங்களிலும், பாட்டில்களிலும் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக எண்ணெய் சற்று ஊற்றுகின்றனர் என்பதால், பொதுமக்கள் விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இரண்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
கடந்த வாரம் பேரூர் பச்சாபாளையம் பகுதியில், எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களை ஆய்வு செய்தபோது போதிய சுகாதாரம் இல்லாமல் இருந்தது. உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இரண்டு கடைகளுக்கு நோட்டீஸ் அளித்து, குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எண்ணெய் தயாரிப்பு திறந்தவெளியில் இருக்கக்கூடாது; சுகாதாரமான இடம் உள்ளிட்ட, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கடைகள் போன்று, தயாரிப்பு இடங்களிலும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்று பார்வையில் படும்படி ஒட்டப்பட வேண்டும். எண்ணெய் வியாபாரிகளுக்கு வழிகாட்டுதல் கட்டாயம் வழங்கப்படும்.
பேக்கிங் செய்யாத எண்ணெயில், பாமாயிலை கலந்தால் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பொதுமக்கள் பேக்கிங் செய்த எண்ணெய் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.
சில்லரை அளவில் பாத்திரங்களிலும், பாட்டில்களிலும் வாங்கிச்செல்லக்கூடாது. அதுபோன்று விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

