/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒற்றை யானையால் தொழிலாளர்கள் பீதி
/
ஒற்றை யானையால் தொழிலாளர்கள் பீதி
ADDED : ஜன 03, 2026 05:33 AM

வால்பாறை: குரங்குமுடி எஸ்டேட்டில் கடந்த இரண்டு மாதங்களாக முகாமிட்டுள்ள ஒற்றை யானையால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறையில் வன வளம் பசுமையாக உள்ளதால், வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. உருளிக்கல், சிறுகுன்றா, வில்லோனி, குரங்குமுடி, ேஷக்கல்முடி, சங்கிலிரோடு, பன்னிமேடு உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
யானைகள் பகல் நேரத்தில் தேயிலை எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடுகின்றன.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. பகல் நேரத்தில் தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் வழித்தடத்திலும், தேயிலை செடிகளுக்கு மத்தியிலும் ஒற்றை யானை முகாமிடுவதால், தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர்.
எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:
குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் யானைகள் கூட்டம் அதிகமாக உள்ளன. குறிப்பாக, முருகன் எஸ்டேட், ஸ்ரீராம், சிவா காபி உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
யானைகள் ஒரு சில நாட்களுக்கு பின், வேறு பகுதிக்கு இடம் பெயர்கின்றன. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ஒற்றை யானை, எஸ்டேட் பகுதியிலேயே நிரந்தரமாக முகாமிட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் பணிக்கு செல்ல அச்சப்படுகின்றனர். வனத்துறை அதிகாரிகள் யானையை பிடித்து, வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

