/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்வு
/
தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்வு
ADDED : ஏப் 18, 2025 06:43 AM

கோவை; கிறிஸ்தவர்களின் புனித வாரத்தில் ஒரு பகுதியாக நேற்று தேவாலயங்களில் பெரிய வியாழன் அனுசரிக்கப்பட்டது.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் மார்ச் 5ம் தேதி 'சாம்பல் புதன்' அன்று துவங்கி வரும், 20ம் தேதி ஈஸ்டர் வரை கடைபிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஞாயிறு குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் செலவிட்ட இறுதி நாட்களை நினைவு கூரும் வகையில், பெரிய வியாழன் அன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் பாதம் கழுவும் நிகழ்வு நடைபெறும்.
இதையடுத்து, மாநகரில் புனித மிக்கேல் அதிதுாதர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோனியார் தேவாலயம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், கோவைப்புதுார் குழந்தை இயேசு ஆலயம், போத்தனுார் புனிய சூசையப்பர் ஆலயம், கார்மெல் நகர் கார்மெல் அன்னை ஆலயம், கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா, சி.எஸ்.ஐ., கிறிஸ்து நாதர் ஆலயம், இம்மானுவேல், ஐ.பி.ஏ., சர்ச், ஹோலி டிரினிட்டி உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பாதம் கழுவும் நிகழ்வு நடந்தது.
போத்தனுார், கார்மெல் அன்னை ஆலயத்தில் உதவி பங்குத்தந்தை எட்வின் தலைமையில் பாதரியார்கள் திருச்சபையை சேர்ந்தவர்களின் பாதங்களை கழுவினர். இதேபோல், ராமநாதபுரம் ஹோலி டிரினிட் கதீட்ரலில் நடந்த சிறப்பு திருப்பலியில், மறைமாவட்ட ஆயர் மார்பால் ஆல்பர்ட், பங்கு மக்கள் 12 பேரின் பாதங்களை கழுவினார்.
இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டு, ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.