அய்யப்ப சாமி கோயிலில் அந்த தொண தொண சவுண்ட நிறுத்தப்பா!
அய்யப்ப சாமி கோயிலில் அந்த தொண தொண சவுண்ட நிறுத்தப்பா!
UPDATED : செப் 29, 2026 04:33 PM
ADDED : செப் 29, 2026 04:21 PM

சித்தாபுதூர் அய்யப்பன் கோயிலுக்கு போயிருந்தோம். வாசலில் 3 இடங்களில் பெரிய போர்டு இருந்தது. தமிழக அரசு உத்தரவுப்படி கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல கூடாது என்று தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் அச்சிட்ட போர்டுகள்.
நல்ல விஷயம். ஆனால், போர்டில் உள்ளதை அப்படியே ஒலிப்பதிவு செய்து, ஒரு வினாடி கூட இடைவெளி இல்லாமல் ஸ்பீக்கரில் ஒலிபரப்பி கொண்டே இருக்கின்றனர்.
அமைதியாக பிரார்த்தனை செய்து சாமி கும்பிட வரும் பக்தர்கள் காதில், வெந்நீர் ஊற்றுவது போல நாராசமாக இருக்கிறது. தயவு செய்து நிறுத்துங்கள். கோயிலுக்கு வரும் எண்ணத்தையே சிதைத்து விடாதீர்கள்.
கோமதி சங்கரன்
துடியலூர்
-
செம்மொழி பூங்கா
தமிழர்களுக்கு மட்டுமா?
டில்லியில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர். செம்மொழி பூங்கா செல்ல விரும்பினர். வழி சொல்லி மகளையும் உடன் அனுப்பினேன். யாருக்கும் தமிழ் வாசிக்க தெரியாது.
கேட் வழியாக உள்ளே சென்றவர்கள் அங்கிருந்து போன் போட்டனர். டிக்கெட் எங்கே எடுக்க என்று கேட்டனர். யாரிடமோ தமிழில் விசாரித்தபோது, கிண்டலுக்கு கேட்பதாக நினைத்து அவர் பதில் சொல்லாமல் போனாராம். பிறகுதான் தெரிந்தது ஆங்கிலத்தில் ஒரு போர்டு கூட இல்லை என்பது. தமிழக அரசு ஒரு மொழி கொள்கைக்கு மாறி விட்டதா?
- மீனலோசனி.ஆர்.
நேரு நகர்
என்ன எதிர்பார்க்கிறது
நம்ம மாநகராட்சி?
காந்திமாநகர் பூங்காவை அடுத்த தெருமுனை இது. இந்த ஆள் முழுங்கி சாக்கடை 2 வருடமாக இப்படியே இருக்கிறது. கவுன்சிலர், உதவி பொறியாளர் என எல்லோருக்கும் தெரியும். இந்த ரோடை அடிக்கடி தோண்டி மூடுகின்றனர். உடைந்த சாக்கடைக்கு மட்டும் விமோசனம் இல்லை. பள்ளிகள் மிகுந்த ஏரியாவில், இப்படி வேண்டும் என்றே பள்ளத்தை மூடாமல் விடுவதற்கு ஒரு காரணமாவது சொல்ல வேண்டும் அதிகாரிகள்.
- சுமதி ராஜாமணி
பாரதி நகர்
பிரேக் பிடிக்காத ஸ்கூல்
பஸ்சை இயக்கலாமா ?
காந்திபுரம் நஞ்சப்பா சாலையிலுள்ள தனியார் பள்ளி பஸ், சில தினங்களுக்கு முன்பு மாலை குழந்தைகளை வீடுகளில் இறக்கி விடுவதற்காக சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் சாலை கண்ணப்பநகர் சிக்னலை கடக்கும் போது, எதிரே நின்று கொண்டிருந்த பழ விற்பனை வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. முன் பக்க கண்ணாடி உடைந்தது. பஸ்சில் இருந்த பள்ளி குழந்தைகள் கூச்சல் எழுப்பி பயந்து நடுங்கினர். பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை, ஹேண்ட் பிரேக்கும் கையோடு வந்துவிட்டதாம். பெயின்ட் அடித்து வரிசையாக நிறுத்தி அதிகாரிகள் நடத்தும் ஆய்வு சும்மா பெயருக்குதான் என்பது உறுதியாகிறது. மறு ஆய்வு செய்ய வேண்டும்.
-- சுரேஷ்குமார்
ஹவுசிங்யூனிட்
