/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யாருக்காக உள்அலங்கார ஆடம்பரம் கடன் சுமையை தவிர்க்க பாருங்க பாஸ்
/
யாருக்காக உள்அலங்கார ஆடம்பரம் கடன் சுமையை தவிர்க்க பாருங்க பாஸ்
யாருக்காக உள்அலங்கார ஆடம்பரம் கடன் சுமையை தவிர்க்க பாருங்க பாஸ்
யாருக்காக உள்அலங்கார ஆடம்பரம் கடன் சுமையை தவிர்க்க பாருங்க பாஸ்
ADDED : ஏப் 19, 2025 03:00 AM

நாங்கள் புதியதாக வீடு கட்ட உள்ளோம். எங்களுக்கு பொருத்தமான பொறியாளரை தேர்வு செய்வது எப்படி?
-ராஜேந்திரன், செட்டிபாளையம்.
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள், பொறியாளர்களைக் கொண்டு கட்டிய வீட்டை சென்று பாருங்கள். அவர்களிடம் பொறியாளரை பற்றி அறிந்து கொண்டு தேர்வு செய்யலாம். நமது மாவட்டத்தில் உள்ள கட்டுமான பொறியாளர் சங்கத்தை அணுகி உங்களுக்கு தேவையான பொறியாளரை தேர்வு செய்து கொடுப்பார்கள். இதற்காக பொறியாளர் சங்கத்தினர் எந்தவிதமான சேவை கட்டணமும் பெறுவதில்லை. இதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நான் எனது வீடு கட்டி மூன்று வருடங்கள் ஆகின்றன. வீட்டின் கேட்டை தானியங்கி கேட்டாக மாற்ற முடியுமா?
-ராஜு, கவுண்டம்பாளையம்.
தற்பொழுது பல நிறுவனங்கள், கேட்டுக்கு தேவையான மோட்டார்களை தயாரித்து மாட்டிக் கொடுக்கிறார்கள். இது ரூ.50 ஆயிரம் முதல் கிடைக்கிறது. நமது மாவட்டத்தில் கட்டட கண்காட்சி நடைபெறும் இடங்களை பார்வையிட்டும் மற்றும் ஆன்லைனில் தொடர்பு கொண்டும், 'வாரன்டி' மற்றும் சேவை நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். இதில் பராமரிப்பு செலவு மிகக் குறைவு என்பது இதன் சிறப்பு.
எங்கள் வீட்டில் மேற்கூரையில் பூஞ்சை போன்று படிந்துள்ளது. இதை எவ்வாறு அகற்றுவது; பலமுறை சுத்தம் செய்தும் பயனில்லை?
-செந்தில், மதுக்கரை.
உங்கள் கூரையின் மேற்பகுதியில் நீர் தேங்குவதால் இவ்வாறு ஏற்படுகிறது. கான்கிரீட்டின் மேல் நீர் வெளியேறும் பகுதியில் அடைப்பை அகற்ற வேண்டும். மற்றும் இலைகள், குப்பை அகற்றி அடிக்கடி சுத்தம் செய்தல் வேண்டும். பாசிபடுதலை 'பிரஷர் பம்ப்' கொண்டு தண்ணீரை அடித்தால் எளிதாக சுத்தம் செய்யலாம். அல்லது இதை சரி செய்வதற்கு பல வாட்டர் புரூபிங் நிறுவனங்கள் உள்ளன. அவர்களை வரவழைத்து சுத்தம் செய்து, அதன் மேல் 'வாட்டர் புரூபிங் கோட்டிங்' அடித்தால் பிரச்னையை நிரந்தரமாக தடுக்கலாம்.
புதிதாக வீடு கட்ட உள்ள நிலையில் உள்அலங்காரத்திற்கு எவ்வளவு செலவு செய்யலாம் அல்லது எவ்வளவு தேவைப்படும். எனக்கு குழப்பமாக உள்ளது.
-ராஜன், பேரூர் செட்டிபாளையம்.
உணவு, உடை, இருப்பிடம் இவை அனைத்தும் மனிதனின் அத்தியாவசியம் என்பதை தாண்டி ஆடம்பரம் என்ற நிலையை எட்டி விட்டது. இதனால், உள்அலங்காரம் என்பது தவிர்க்க முடியாதது. நீங்கள் வெளிப்புற அலங்காரம் செய்வதை காட்டிலும், சமையலறை மற்றும் படுக்கையறை ஆகியவற்றுக்கு தேவைக்கேற்ப செலவு செய்தல் நன்று. இதனுடன் ஹால் மற்றும் பூஜை அறைகளையும் அலங்கரித்துக் கொள்ளலாம். முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது கட்டடம் கட்டிய உடன், நம்மிடம் இருக்கும் தொகையை கொண்டு சரியாக திட்டமிடல் வேண்டும். அடுத்தவர்கள் பார்ப்பதற்காக செலவு செய்ய விரும்பினால், கடன் சுமை மேலும் அதிகமாகிவிடும். எனவே கவனத்தில் கொண்டு செலவிட வேண்டும்.
நாங்கள் வீடு கட்டி பல வருடங்கள் ஆகின்றன. எங்கள் வீட்டில் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன. இதற்கு காரணம் என்ன?
-விஜய் ஆனந்த், ராமநாதபுரம்.
வீடு கட்டி முடித்தவுடன் 'எர்த்திங்' அமைக்க வேண்டும். ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக சர்க்யூட் பிரித்து, லோடுகள் சமமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மின்சாதனங்கள் பழுதடையாமல் பாதுகாக்கலாம். நீங்கள் உடனடியாக எலக்ட்ரீஷியனை அழைத்து ஒரு 'எர்த் பிட்' போட்டுக் கொள்ள வேண்டும்.
-பொறியாளர் ராஜரத்தினம்
செயலாளர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா)

