/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரம்பரிய கைத்தறி பட்டு புடவைகளுக்காக சிறுமுகையை தேடும் வெளிநாட்டினர்! நெசவாளர்களின் உழைப்பை கண்டு வியப்பு
/
பாரம்பரிய கைத்தறி பட்டு புடவைகளுக்காக சிறுமுகையை தேடும் வெளிநாட்டினர்! நெசவாளர்களின் உழைப்பை கண்டு வியப்பு
பாரம்பரிய கைத்தறி பட்டு புடவைகளுக்காக சிறுமுகையை தேடும் வெளிநாட்டினர்! நெசவாளர்களின் உழைப்பை கண்டு வியப்பு
பாரம்பரிய கைத்தறி பட்டு புடவைகளுக்காக சிறுமுகையை தேடும் வெளிநாட்டினர்! நெசவாளர்களின் உழைப்பை கண்டு வியப்பு
ADDED : மே 20, 2025 11:33 PM

மேட்டுப்பாளையம்: சிறுமுகையை தேடி சிங்கப்பூர், ஜெர்மன், ஜப்பான், அமெரிக்க மக்கள், பாரம்பரியமிக்க கைத்தறி பட்டு புடவைகள், மென்பட்டு புடவைகள் வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை, ஆலாங்கொம்பு, பகத்தூர், திம்மராயம்பாளையம், சென்னம்பாளையம், வெள்ளிக்குப்பம்பாளையம், வச்சினம்பாளையம், மூக்கனூர், மூலத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
சிறுமுகையில் உள்ள நெசவாளர்களால் கைத்தறிகளில் நெசவு செய்யப்படும் பட்டு, மென்பட்டு, காட்டன், கோரா காட்டன் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி ரகங்களுக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.
இந்தியா முழுவதும் சிறுமுகை மென்பட்டுகளுக்கு மவுசு உள்ளது. மென்பட்டுகள் மிகவும் எடை குறைவு என்பதால் பெண்களின் விருப்ப தேர்வில் மென்பட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.
நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர் பாரம்பரியமிக்க கைத்தறி உடைகளை தேடி வரும் போது, தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் சிறுமுகையை தேர்வு செய்கின்றனர். அண்மை காலமாக சிறுமுகையை நோக்கி சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சிறுமுகையில் உள்ள தனியார் ஜவுளி கடை உரிமையாளர் தண்டபாணி கூறியதாவது:-
விவசாயிகளுக்கு அடுத்தப்படியாக நெசவாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதிலும் கைத்தறி நெசவுத் தொழில் மிகவும் பாரம்பரியம் மிக்க தொழிலாக கருதப்படுகிறது. கைத்தறியில் நெசவு செய்யப்படும் ஆடைகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம். தற்போது வெயில் காலம் என்பதால் கைத்தறி காட்டன் புடவைகள், மென்பட்டுகளுக்கு மவுசு கூடியுள்ளது.
மக்கள் பாரம்பரியத்தை நோக்கி செல்கின்றனர். விழாக்களில் கைத்தறி பட்டு சேலை உடுத்தி கொள்வதை பெண்கள் மிகவும் விரும்புகின்றனர். என்னதான் விசைத்தறிகளில் பல டிசைகளில் சேலை வந்தாலும், கைத்தறி தான், அதிலும் மென்பட்டு பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.
சிறுமுகைக்கு சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகின்றனர். சிறுமுகையின் சிறப்பை இணையம், பாரம்பரிய ஆர்வலர்கள் போன்ற பல்வேறு தரப்பிலும் வெளிநாட்டினர் அறிந்து கொண்டு இங்கு வருகின்றனர்.
நெசவாளர்களின் உழைப்பை கண்டு வியந்து போகின்றனர். தொழில் நுணுக்கங்களை கவனித்து பிரமிக்கின்றனர். நாளுக்கு நாள் வெளிநாட்டினர் வருகை அதிகரித்துள்ளது. கைத்தறி பட்டுகளுக்கு வெளிநாட்டினர் இடையே மவுசு கூடியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கைத்தறி பட்டுக்கு இருக்கும் மவுசு போல் காட்டன் புடவைகளுக்கும் தற்போது மவுசு கூடியுள்ளது. இதுகுறித்து, நெசவாளர்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் காட்டன் ஆடைகளை அணிய விரும்புகின்றனர்.
வெயிலால் காட்டன் புடவைகளின் விற்பனை 70 முதல் 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் நெசவாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர், என்றனர்.