ADDED : ஏப் 02, 2026 06:52 PM
காரமடை: காரமடை அருகே ஒன்னிப்பாளையத்தில், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஒன்னிப்பாளையம் கிராமத்தில் உள்ள கரடு பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர், ஆய்வு செய்தனர். சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால், இதை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க, 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. உயர் அலுவலர்களின் உத்தரவுப்படி கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். முடிந்தளவு மாலை 6:00 மணிக்கு மேல் அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தோட்டத்து வீடுகளில் வெளியே சமவெளியில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
