/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடையை மீறி 'டிரெக்கிங்' சென்றால் நடவடிக்கை; வனத்துறையினர் எச்சரிக்கை
/
தடையை மீறி 'டிரெக்கிங்' சென்றால் நடவடிக்கை; வனத்துறையினர் எச்சரிக்கை
தடையை மீறி 'டிரெக்கிங்' சென்றால் நடவடிக்கை; வனத்துறையினர் எச்சரிக்கை
தடையை மீறி 'டிரெக்கிங்' சென்றால் நடவடிக்கை; வனத்துறையினர் எச்சரிக்கை
ADDED : பிப் 20, 2025 06:20 AM
கோவை; தடையை மீறி வனப்பகுதியில் டிரெக்கிங் சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் போன்ற இடங்களில், வன உயிரினங்களை கண்டுகளிக்க, சூழலியல் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில், குறிப்பிட்ட சில வனப்பகுதிகளில் மலையேற்ற பாதைகள் உள்ளன. 'டிரெக்கிங்' என்ற பெயரில் ஆர்வலர்கள், இளைஞர்கள் இந்த வழித்தடங்களுக்கு நடந்து செல்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில், 44 இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் (டிரெக்கிங்) உள்ளன. 2018ம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கனியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், காட்டுத்தீயில் சிக்கி, 20 பேர் உயிரிழந்தனர்.
இதனால், கோடை காலத்தில் மலையேற்ற பயிற்சிக்கு, வனத்துறை அனுமதி மறுத்து வருகிறது. தற்போது, மாநிலம் முழுவதும் கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிகிறது. இதனால், மலைப்பாதைகளில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள தடை விதித்து, வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
'அத்துமீறினால் ஆபத்து'
மாவட்ட வனத்துறை அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''தற்போது வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். அங்கு கண்காணிப்பு குழு உள்ளது. அதனால், வனப்பகுதிக்குள் யாரும் டிரெக்கிங் செல்ல முடியாது. பர்லியார், சேம்புக்கரை உள்ளிட்ட அனைத்து டிரெக்கிங் செல்லும் பாதைகளிலும், செக்போஸ்ட்கள் உள்ளன.
அவற்றை தாண்டி யாரும் செல்ல முடியாது. கண்காணிப்புக்கு, 35 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் வனவிலங்குகள் நீர் அருந்தும் தொட்டிகளுக்கு அருகே, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வனப்பகுதிக்குள் யாராவது அத்துமீறி நுழைந்தால், கேமராவில் பதிவாகும்.
அதைக் கொண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் பர்லியார் பகுதியில் அதேபோன்று ஒருவர் கண்டறியப்பட்டு, ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடையை மீறி வனத்துக்குள் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

