/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் விலங்குகளை தொந்தரவு செய்தால் தண்டனை ரிசார்ட்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ADDED : ஜன 01, 2026 05:04 AM
கோவை: வனங்களை ஒட்டியுள்ள ரிசார்ட்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் விடிய விடிய அதிக ஒலி ஒளியுடன் ஆடல் பாடல், பட்டாசு வெடிப்பது என விலங்குகளுக்கு தொந்தரவு கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என, வனத்துறை எச்சரித்துள்ளது.
ஆனைகட்டி பகுதியில், ரிசார்ட்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடப்பதாக விளம்பரங்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறியதாவது:
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அதிக கூட்டம் சேர்த்து வாகன நெரிசல் ஏற்படுத்த கூடாது.
அதிக ஒளி வீசும் விளக்குகளை உபயோகிக்க கூடாது. கேம்ப் பயர் என்ற பெயரில் கட்டைகளுக்கு தீ வைக்க கூடாது. விலங்குகளுக்கு தொல்லையோ ஆபத்தோ ஏற்படுத்தும் எந்த செயலிலும் ஈடுபட கூடாது, என வனங்களை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள், கேளிக்கை விடுதிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம்.
மது அருந்திவிட்டு நள்ளிரவில் விருந்தினர்கள் வாகனம் ஒட்டிச் செல்வதால், விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ பாதிப்பு ஏற்படும். அதை கண்காணித்து தடுப்பது தங்கும் விடுதிகளின் பொறுப்பாகும். விடுதி அருகில் யானை, மான், காட்டு மாடு போன்ற விலங்குகள் தென்பட்டால் அவற்றை விரட்டக்கூடாது.
இரவு 8:00 மணிக்கு மேல் வனச்சாலையை பயன்படுத்தக்கூடாது. கொண்டாட்ட நிகழ்ச்சிகளால் உருவாகும் குப்பைகளை வனப்பகுதிக்குள் கொட்டக்கூடாது என்ற விதிமுறைகளை அனைத்து ரிசார்ட்களுக்கும் ஒரு வாரத்துக்கு முன்பே நோட்டீசாக வழங்கி, அவர்களின் ஒப்புதலும் வாங்கியுள்ளோம்.
ஆனைகட்டி பகுதியிலும் இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. விதிகள் மீறப்படுகிறதா என கண்காணிக்க குழு அமைத்து கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளோம். தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.