/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடல் நலமின்றி தவித்த யானை உயிரிழந்தது வனத்துறையினர் முயற்சி தோல்வி; வன ஆர்வலர்கள் சோகம்
/
உடல் நலமின்றி தவித்த யானை உயிரிழந்தது வனத்துறையினர் முயற்சி தோல்வி; வன ஆர்வலர்கள் சோகம்
உடல் நலமின்றி தவித்த யானை உயிரிழந்தது வனத்துறையினர் முயற்சி தோல்வி; வன ஆர்வலர்கள் சோகம்
உடல் நலமின்றி தவித்த யானை உயிரிழந்தது வனத்துறையினர் முயற்சி தோல்வி; வன ஆர்வலர்கள் சோகம்
ADDED : மே 21, 2025 02:08 AM

தொண்டாமுத்துார்:கோவையில், உடல் நலக்குறைவால் நான்கு நாட்களாக போராடி வந்த பெண் யானை, சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தது; வனத்துறையினரின் முயற்சி தோல்வியடைந்தது.
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரத்தில், வனப்பகுதியையொட்டி, பாரதியார் பல்கலைக்கு சொந்தமான பட்டா நிலத்தில், 17ம் தேதி மாலை, 25 முதல், 30 வயதுடைய பெண் யானை உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கீழே விழுந்தது. ரொம்ப நேரமாக எழ முடியாமல் கிடந்ததால், குட்டி யானை பிளிறி, தாயை மீட்க போராடியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், உடல் நலமின்றி, கீழே விழுந்து கிடந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தனர்.
தாயை விட்டு பிரியாத குட்டி யானை, வனத்துறையினரை விரட்டியதால், சிகிச்சை அளிக்க முடியவில்லை. மறுநாள், பாதுகாப்புக்காக, 'ஒரியன்' என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது. கும்கியை கண்டதும், குட்டி யானை பயந்து, வனப்பகுதிக்குள் ஓடியது. அதன்பின், பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். உடல் நலம் சற்றுத் தேறியதால், 'கிரேன்' உதவியுடன் 'பெல்ட்' கட்டி, நிற்க வைத்தனர்.
நான்காம் நாளான நேற்று, நிலத்தில் குழி தோண்டி, தண்ணீர் நிரப்பி, கிரேன் இயந்திரம் மூலம் யானையை இறக்கி, 'ஹைட்ரோதெரபி' என்கிற சிகிச்சை அளித்தனர். அப்போது, மயங்கி சரிந்தது. வனக்கால்நடை மருத்துவ குழுவினர் சோதனை செய்தபோது, உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றாலும், இறப்புக்கான உண்மையான காரணம், பிரேத பரிசோதனை செய்த பிறகே தெரியவரும். 21ம் தேதி (இன்று) பிரேத பரிசோதனை செய்யப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனத்துறையினர் முயற்சி தோல்வி அடைந்து, யானை உயிரிழப்பால், வன ஆர்வலர்கள் சோகமாயினர். யானை விழுந்து கிடந்த இடத்துக்கு அருகில் சோமையம்பாளையம் ஊராட்சியால் குப்பை கிடங்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில், பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமாக கொட்டப்பட்டிருக்கின்றன. அப்பகுதியில், யானையின் சாணம் காணப்படுகிறது. அதனால், குப்பை குவியலுக்குள் உணவு தேடியபோது, பிளாஸ்டிக் பொருட்களையும் உட்கொண்டிருக்கலாம் என வன ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே, வன விலங்குகள் நடமாடும் இப்பகுதியில் கொட்டியுள்ள குப்பையை அகற்றி விட்டு, இனி கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
குட்டியின் நிலை என்ன?
வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த, 18ம் தேதி, கும்கி யானை வந்தபோது, குட்டி யானை வனப்பகுதிக்குள் ஓடியது. தற்சமயம் பாரதியார் பல்கலை பின்புறம் உள்ள வனப்பகுதியில் காணப்படுகிறது. 3 வயதான குட்டி என்பதால், தாய்ப்பால் எதிர்பார்க்காமல், தானே, உணவு எடுத்துக் கொள்கிறது. இதே வனப்பகுதியில் உள்ள மற்ற யானைகளுடன் இணைந்திருக்க வாய்ப்புள்ளது. குட்டியை தொடர்ந்து தேடி வருகிறோம்' என்றனர்.