/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று பள்ளிகளில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்
/
மூன்று பள்ளிகளில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்
ADDED : ஜன 12, 2024 09:00 PM

கருமத்தம்பட்டி;கருமத்தம்பட்டி நகராட்சியில், மூன்று ஊர்களில் பள்ளி கட்டடங்கள் கட்டும் பணிகளை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
கருமத்தம்பட்டி நகராட்சியில், மாநில நிதி ஆணையம் - பள்ளி மேம்பாட்டு நிதி வாயிலாக, புதிய பள்ளி கட்டடங்கள் கட்ட, எலச்சிபாளையத்துக்கு, 34 லட்சம் ரூபாயும், ராயர்பாளையத்துக்கு, 49 லட்சம் ரூபாயும், சுப்பராயன் புதுாருக்கு, 46 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, எலச்சிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி பணிகளை துவக்கி வைத்தார்.
கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தளபதி முருகேசன், வார்டு கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், 'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் ஏற்கனவே இருக்கும் பகுதிகளை தவிர்த்து மேலும் புதிய பகுதிகளை சேர்ப்பது சிரமம் என, திட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். கூடுதலான பகுதிகள் வாய்ப்பு இருந்தால் சேர்க்கப்படும். இல்லை என்றால் தனியாக திட்டம் வகுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள பள்ளிக்கு நன்கொடையாளர் இடம் வழங்கியுள்ளார்.
மேல்நிலைப்பள்ளி வேண்டும் என, மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.