/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு வழிச்சாலையாகும் கவுலி பிரவுன் ரோடு.. நில அளவீடு துவக்கியது; நெடுஞ்சாலைத்துறை
/
நான்கு வழிச்சாலையாகும் கவுலி பிரவுன் ரோடு.. நில அளவீடு துவக்கியது; நெடுஞ்சாலைத்துறை
நான்கு வழிச்சாலையாகும் கவுலி பிரவுன் ரோடு.. நில அளவீடு துவக்கியது; நெடுஞ்சாலைத்துறை
நான்கு வழிச்சாலையாகும் கவுலி பிரவுன் ரோடு.. நில அளவீடு துவக்கியது; நெடுஞ்சாலைத்துறை
ADDED : அக் 17, 2024 11:52 PM

கோவை : கோவை மருதமலை ரோடு - மேட்டுப்பாளையம் ரோட்டை இணைக்கும் வகையில், கவுலி பிரவுன் ரோட்டை நான்கு வழியாக அகலப்படுத்த தேவையான நிலம் அளவீடு செய்யும் பணியை, வருவாய்த்துறையினருடன் மாநில நெடுஞ்சாலைத்துறை இணைந்து மேற்கொள்கிறது.
கோவை தடாகம் ரோடு, மருதமலை ரோடு, கவுலி பிரவுன் ரோடு ஆகிய மூன்று ரோடுகள் லாலி ரோடு சிக்னலில் சந்திக்கின்றன. அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, ரூ.120 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. இவ்வழித்தடத்தில், 'மெட்ரோ ரயில்' இயக்க உத்தேச வழித்தடம் முன்மொழியப்பட்டு இருப்பதால், மேம்பாலம் கட்டும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, லாலி ரோடு சந்திப்பில் சிக்னல் முறையை அகற்றி, 'யூ டேர்ன்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது, வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றாலும் தற்காலிக தீர்வாக இருப்பதால், மருதமலை ரோடு - கவுலி பிரவுன் ரோட்டை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு, வேளாண் பல்கலை மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான இடங்களை அளவீடு செய்து, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றவும், நில அளவீடு செய்யும் பணியை உடனடியாக துவக்கவும் அறிவுறுத்தப்பட்டது. நான்கு வழிச்சாலை உருவாக்க கருத்துரு தயாரிக்க கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார். மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று நில அளவீடு செய்யும் பணியை துவக்கினர்.
விரைவில் கருத்துரு
மருதமலை ரோடு மற்றும் கவுலி பிரவுன் ரோட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் எவ்வளவு இருக்கிறது; நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டுமெனில், இன்னும் எவ்வளவு நிலம் தேவை என்பதை கண்டறிய அளவீடு பணி துவக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களில் எவ்வளவு இடம் தேவை. சாலையை அகலப்படுத்த தேவைப்படும் நிலங்கள் எந்தெந்த அரசு துறைகளுக்குச் சொந்தமானது என்பதை கண்டறிந்து, நில வகை மாற்றம் செய்தால் போதும்; கையகப்படுத்த வேண்டிய தேவை இருக்காது. இதுதொடர்பாக விரைவில் கருத்துரு தயாரிக்கப்படும்.
- ஞானமூர்த்தி, கோட்ட பொறியாளர்,
மாநில நெடுஞ்சாலைத்துறை.