/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆள் கடத்தல் சம்பவம் நால்வரிடம் விசாரணை
/
ஆள் கடத்தல் சம்பவம் நால்வரிடம் விசாரணை
ADDED : ஆக 13, 2025 09:56 PM
போத்தனூர்; கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்தவர் முஹமது ரஷீத்.35. இவர் சையது இப்ராஹிம் என்பவரின் சகோதரர் வீட்டில் ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து, போக்கியத்திற்கு வசித்து வந்தார். இத்தொகையை சையது இப்ராஹிம் பெற்றுக்கொண்டார்.
பின் அவ்வீடு விற்பனைக்கு வந்தபோது, ரூ.35 லட்சத்திற்கு முஹமது ரஷீத் வாங்கினார். போக்கியத்திற்கு கொடுத்த ரூ.7 லட்சத்தை தருமாறு, சையது இப்ராஹிமிடம் கேட்டார். மாதங்கள் கடந்தும் பணம் தரவில்லை. இருவருக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த, 6ம் தேதி சையது இப்ராஹிம், முஹமதுரஷீதை தொடர்பு கொண்டு, தான் பணம் தருவதாகவும், குறிச்சி பொங்காளியம்மன் கோவில் அருகே வருமாறும் அழைத்துள்ளார்.
அங்கு சென்ற முஹமதுரஷீதை, சையது இப்ராஹிம் உள்ளிட்ட கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்றது. கிணத்துக்கடவு அருகே அவரை தாக்கி, ரூ.10 ஆயிரம் ரொக்கம், இரு மொபைல்போன்களை பறித்து, துரத்தி விட்டது.
முஹமது ரஷீத் புகாரில், போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நான்கு பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

