/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தையாற்றில் இலவச படகு பயணம்
/
காந்தையாற்றில் இலவச படகு பயணம்
ADDED : ஆக 27, 2025 10:45 PM

மேட்டுப்பாளையம்; லிங்காபுரம்-காந்தவயல் இடையே தண்ணீர் அதிகளவில் தேங்கி உள்ளதால், காந்தையாற்றை கடந்து வருவதற்கு, இலவச மோட்டார் படகு சவாரி வசதி செய்யப்பட்டுள்ளது.
சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட,  லிங்காபுரத்துக்கும், காந்தவயலுக்கும் இடையே காந்தையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே  கட்டிய  உயரம் குறைவான பாலம் நீரில் மூழ்கியது. இதைத் தொடர்ந்து புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னும் பணிகள் முடியவில்லை. இந்நிலையில் காந்தையாற்றின் குறுக்கே கட்டிய சிறிய பாலத்தின் மீது நான்கு அடிக்கு தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து தடைபட்டது. அதனால் மீண்டும் பரிசல் பயணம் தொடங்கியது. பரிசல் பயணம் ஆபத்தானது என்பதால், சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம், ஊட்டி படகு இல்லத்தில் இருந்து, மோட்டார் படகை கொண்டு வந்து, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக இயக்கி வருகிறது.
இது குறித்து சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் மாலா கூறியதாவது: காந்தையாற்றில் மோட்டார் படகு காலை ஆறு மணியிலிருந்து, இரவு 9:30 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது. தினமும் பத்திலிருந்து, 13 லிட்டர் பெட்ரோல் செலவாகிறது. தினமும், 400க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்கின்றனர். ஆற்றில் தண்ணீர் குறையும் வரை, தொடர்ந்து இந்த படகு சேவை இலவசமாக இயக்கப்படும். இவ்வாறு செயல் அலுவலர் கூறினார்.

