/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு: கோவை பணியாளர்கள் சொல்வது என்ன?
/
துாய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு: கோவை பணியாளர்கள் சொல்வது என்ன?
துாய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு: கோவை பணியாளர்கள் சொல்வது என்ன?
துாய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு: கோவை பணியாளர்கள் சொல்வது என்ன?
ADDED : அக் 25, 2025 12:51 AM

செ ன்னையை போல் கோவை மாநகராட்சியிலும், இலவச உணவு திட்டம் செயல்படுத்த துாய்மை பணியாளர்கள், டிரைவர்கள் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும், இலவச உணவு வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
கோவை மாநகராட்சியிலும் இத்திட்டத்தை செயல்படுத்த, எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் என்கிற பட்டியல் பெறப்பட்டிருக்கிறது.
நிரந்தர தொழிலாளர்கள் - 1,890, ஒப்பந்த தொழிலாளர்கள் - 4,247, கொசு ஒழிப்பு பணியாளர்கள் - 1,209, குப்பை லாரி டிரைவர்கள் - 614, கழிவு நீர் வாகன ஓட்டுனர்கள் - 31 என, 7,991 பேர் பணிபுரிகின்றனர்.
காலை, மதியம், இரவு என மூன்று ஷிப்டுகளில் எவ்வாறு உணவு வழங்கலாம் என்கிற விபரம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக நகராட்சிகளின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகத்தில் இருந்து, அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வந்தபின் செயல்படுத்துவதற்கு, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
இத்திட்டம் தொடர்பாக, துாய்மை பணியாளர்கள் சிலரிடம் கருத்து கேட்டோம்...
'பென்ஷன் வேண்டும்' காந்திபுரம் பகுதியில் பணிபுரிகிறேன். துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்குவது நல்லதே. வேலைக்குச் சேர்ந்து 18 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. நாங்கள் ஓய்வு பெற்றால் பென்ஷன் இல்லை. பென்ஷன் திட்டம் செயல்படுத்த வேண்டும். உணவு வழங்குவதை விட, எங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும். - பிரேமாவதி
'டீ மட்டும்தான் குடிக்கிறோம்' காந்திபுரம் பகுதியில் துாய்மை பணி செய்கிறேன். துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்குவது நல்லது தான். சில நேரங்களில் டீ மட்டும் குடித்து விட்டு வேலைக்குச் சென்று விடுவோம். 11.30 மணிக்கு வந்து சாப்பிட்டு விட்டு, மதியம் 2 மணிக்கு மீண்டும் வேலைக்குச் செல்வோம். சுமை அதிகரித்திருக்கிறது. ஒரு ஏரியாவை சுத்தம் செய்து முடித்து விட்டால், அருகாமையிலும் சுத்தம் செய்யச் சொல்கின்றனர். - ஜெயலட்சுமி
'பணி நிரந்தரமே தேவை' ஆவாரம்பாளையத்தில் பணிபுரிகிறேன். டீ, போண்டா சாப்பிட்டு விட்டு, துாய்மை பணியில் ஈடுபடுகிறோம். வேலையை முழுமையாக முடித்து, 3 மணிக்கு வந்து, சாப்பிடுவோம். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதுபோல், சிறப்பாக நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும். சாப்பாடு கொடுப்பதை விட, பணி நிரந்தரம் செய்தால், இன்னும் சந்தோஷம். - ஜெயக்குமார்
'உணவு ஏற்புடையதல்ல' சித்தாபுதுார் பகுதியில் பணிபுரிகிறேன். தனியாரிடம் கொடுத்ததில் இருந்தே ரொம்ப கஷ்டப்படுகிறோம். நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது தொகுப்பூதியம் வழங்க வேண்டும். எத்தனையோ போராட்டங்கள் நடத்தி விட்டோம்; தீர்வு காணவில்லை. நாலரை ஆண்டுகள் கழித்து இப்போது உணவு தருகிறோம் என்பது ஏற்புடையதல்ல. -ராஜேந்திரன்
'8 மணிக்குள் வேண்டும்' ஆவாரம்பாளையம் பகுதியில் துாய்மை பணியில் ஈடுபடுகிறேன். உணவு கொடுப்பது சந்தோஷம். 8 மணிக்குள் கொடுத்தால் களைப்பு தீரும். அதன் பிறகும் வேலை பார்க்கலாம். இதற்கு முன் மருத்துவ முகாம் நடத்தி, உடலை பரிசோதித்தனர். சமீபகாலமாக செய்வதில்லை. மீண்டும் முகாம் நடத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு தொல்லை கொடுக்காமல் வேலை வாங்க வேண்டும். -பழனிசாமி
'மீண்டும் தட்டு ஏந்தும் நிலையை உருவாக்குவதா'
துாய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு செல்வம் கூறுகையில், ''சோறு கொடுப்பது மட்டுமே தீர்வாகாது. உணவு கொடுத்து வாழ்வாதாரத்தை பறிப்பது சரியல்ல. உப்புமா, காபிக்கு ஓட்டுப்போட்ட சமூகம் என, இதற்கு முன் கூறுவதுண்டு. இன்றைய நவீன யுகத்தில், டிபன் தருவதாக கூறுகின்றனர். பணியை நிரந்தரம் செய்யாமல், தட்டு ஏந்தும் நிலையையே, மீண்டும் உருவாக்குகின்றனர்,'' என்றார்.

