ADDED : அக் 04, 2024 11:33 PM
கோவை: ஏழை எளிய இந்து மக்கள் பயனடையும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரும் அக்.,21 அன்று இலவச திருமணம் நடத்தப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், கோவை மண்டலத்திலுள்ள அறநிலையத்துறை கோவில்களுக்கும், அனுப்பியுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
திருமணம் செய்து கொள்வோருக்கு, நான்கு கிராம் தங்கத்தாலி உள்ளிட்ட திருமண செலவுகளை அறநிலையத்துறையே ஏற்றுக்கொள்ளும்.
கோவை அறநிலையத்துறை மண்டலத்தின் சார்பில், 35 ஜோடிகளுக்கு வரும் அக்., 21ல், இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும்.
இத்திட்டத்தின்படி, திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், அவர்களது வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை தொடர்பு கொண்டு, பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.