/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவச வாகனம் நிறுத்தம்; க்யூ.ஆர். கோடு அறிமுகம்
/
இலவச வாகனம் நிறுத்தம்; க்யூ.ஆர். கோடு அறிமுகம்
ADDED : அக் 06, 2025 12:02 AM
கோவை: இலவச வாகன நிறுத்தம் குறித்த தகவல்களை பெற க்யூ.ஆர்., கோடு வசதியை காட்டூர் போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும், 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு புத்தாடைகள், நகைகள், பேன்ஸி பொருட்கள், மளிகை, இனிப்புகள் உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நெரிசல் அதிகளவு இருந்து வருகிறது.
மேலும், இந்த ரோடுகளில் வாகனங்கள் நிறுத்துவதும் கடினம். கூட்ட நெரிசலில் இலவச வாகன நிறுத்துமிடங்களை கண்டறிவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
இதை தீர்க்க காட்டூர் போலீசார் க்யூ.ஆர்., கோடு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த க்யூ.ஆர். கோடுகளை போலீசார் ஒட்டியுள்ளனர்.
இதன் மூலம் பொதுமக்களின் சிக்கல் தீர்ந்துள்ளது.
போலீசார் கூறுகையில்,'க்யூ.ஆர். கோடுகளை ஸ்கேன் செய்யும் போது இலவச வாகன நிறுத்துமிடங்கள் எங்கு உள்ளது, அதற்கு செல்லும் வழிகளை அறிய முடியும். இதன் மூலம், பொதுமக்கள் தங்களது வாகனங்களை விரைந்து பார்க்கிங் செய்ய முடியும். இதனால், கூட்ட நெரிசல் குறையும்,' என்றனர்.