/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுநோய் சிகிச்சைக்கான இலவச மறு ஆலோசனை முகாம்
/
புற்றுநோய் சிகிச்சைக்கான இலவச மறு ஆலோசனை முகாம்
ADDED : ஜூன் 20, 2025 12:42 AM
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மறு ஆலோசனை வழங்கும் முகாம், ஜூன் 30 வரை நடக்கிறது.
கே.எம்.சி.எச்., நிர்வாகத்தினர் கூறியதாவது:
பரபரப்பாக இயங்கும் உலகில், பெரும்பாலானோர் தங்கள் உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அன்றாட பணியில் தொய்வு, தடுமாற்றம் ஏற்படும்போதுதான், தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துகின்றனர்.
பரிசோதனைக்கு செல்லும்போது, புற்றுநோய் அறிகுறி தெரிந்தால், பயம் தொற்றிக்கொள்கிறது. இதற்கு என்ன காரணம், எப்படி இது நம்மை பாதித்தது என்று, தெரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.
பரிசோதனை அறிக்கையில் புற்றுநோயை உறுதி செய்து டாக்டர் தெரிவித்தாலும், இது சரியா என்பதை அறிந்து கொள்ள மீண்டும் அந்த அறிக்கையை எடுத்துக்கொண்டு, வேறு ஒரு டாக்டரிடம் சென்று, அவரது அறிக்கையையும் பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
புற்றுநோய் மட்டுமின்றி, எந்த நோயாக இருந்தாலும், மற்றொரு டாக்டரிம் இரண்டாவது கருத்து கேட்பது தவறில்லை, என்கிறது மருத்துவ உலகம்.
இதுகுறித்து இணைய தளங்களில் தேடும்போது, பல்வேறு பதில்கள், விளக்கங்கள் கிடைக்கப்பெறுவதால், தேடுவோருக்கு குழப்பம் ஏற்படுகிறது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பு இருக்கலாம். அவற்றுக்கு ஒரே மாதிரியான விளக்கங்கள் பொருந்தாது. ஒரு டாக்டர் கூறியபின், மற்றொரு டாக்டரிடம் ஆலோசனை கேட்பது நல்லதுதான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரண்டாவது ஆலோசனை பெற, எந்த மருத்துவமனைக்கு செல்வது, எந்த டாக்டரை பார்ப்பது என்ற குழப்பம் ஏற்படலாம்.
இதற்கு தீர்வு தரும் வகையில், கே.எம்.சி.எச்., சார்பில், இலவச மறு ஆலோசனை முகாம், ஜூன் 30 வரை நடக்கிறது. முகாமில் பங்கேற்போருக்கு மேற்கொண்டு ஏதாவது பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பின், அதற்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 87548- 87568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.