/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழு விளையாட்டுகளுக்கு கோடை கால இலவச பயிற்சி
/
ஏழு விளையாட்டுகளுக்கு கோடை கால இலவச பயிற்சி
ADDED : ஏப் 21, 2025 10:00 PM
கோவை,; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு வரும், 25ம் தேதி கோடை கால பயிற்சி முகாம் துவங்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டு தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு, கோவை மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி, 21 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி, தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாலிபால், ஜிம்னாஸ்டிக், குத்துச்சண்டை மற்றும் கபடி போட்டிகளுக்கு வரும், 25 முதல் மே 15ம் தேதி வரை பயிற்சி முகாம் நடக்கிறது.
நேரு ஸ்டேடியம் மற்றும் எதிரே மாநகராட்சி மைதானத்தில் முற்றிலும் இலவசமாக இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொள்ளலாம்.
காலை, 6:00 முதல், 8:00 மணி வரையும், மாலை, 4:30 முதல், 6:30 மணி வரையும் வழங்கப்படும் இப்பயிற்சி முகாமில் பங்கேற்க, 74017 03489, 0422 2380010 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்பவர்கள், ஆதார் கார்டுடன் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.
'மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருடன் கலந்தாலோசித்து, அதிக மாணவ, மாணவியரை பங்கேற்கச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்களுடன், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களையும் பயிற்சி அளிக்க பயன்படுத்தலாம். முகாமில் மாணவ, மாணவியருக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்துதர வேண்டும்' என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.