/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை குழியால் அடிக்கடி விபத்து
/
சாலை குழியால் அடிக்கடி விபத்து
ADDED : ஏப் 02, 2025 10:26 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குழியால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் பலர் காயமடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் அரசு போக்குவரத்து கழகம் டெப்போ அருகே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு உள்ளது. இதன் அருகே மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் சாலையில், நீளமான குழி உள்ளது. இந்த இடத்தில் சாலை இறக்கமாக உள்ளதால், வாகனங்கள் அசுர வேகத்தில் வருகின்றன. சாலையில் உள்ள குழியால் கார், வேன், பஸ், லாரி ஆகிய வாகனங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
ஆனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு, குழி அருகே வரும் போதுதான், சாலையில் குழி இருப்பது தெரிய வருகிறது. உடனடியாக வளைத்து ஓட்ட முடியாதவர்கள், அப்படியே குழியில் இறக்கி வாகனத்தை ஓட்டும்போது, விபத்துக்கு உள்ளாகின்றனர். இரவில் இந்த இடத்தில் தினம் தினம் விபத்துக்கள் ஏற்பட்டு, பலர் காயம் அடைந்து வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம், சாலையில் உள்ள குழியை சீரமைக்க வேண்டும் என, இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் முரளி குமார் கூறுகையில், கோடை சீசன் துவங்கியதை அடுத்து, கோவை, ஊட்டி சாலையில் பர்லியாறு வரை, சாலையில் உள்ள குழிகளுக்கு தார் கலவை போட்டு சீர் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. கோவை, மேட்டுப்பாளையம் சாலைகளில் உள்ள குழிகளுக்கு, உடனடியாக தார் கலவை போட்டு, சீர் செய்யப்படும், என்றார்.

