/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதை முதல் வேலி வரை... அசத்துது அக்ரி இன்டெக்ஸ் 2025
/
விதை முதல் வேலி வரை... அசத்துது அக்ரி இன்டெக்ஸ் 2025
விதை முதல் வேலி வரை... அசத்துது அக்ரி இன்டெக்ஸ் 2025
விதை முதல் வேலி வரை... அசத்துது அக்ரி இன்டெக்ஸ் 2025
ADDED : ஜூலை 10, 2025 10:11 PM

கோவை; கோவை கொடிசியா வளாகத்தில், 'அக்ரி இன்டெக்ஸ் 2025' 5 நாள் சர்வதேச வேளாண் வர்த்தக கண்காட்சி நேற்று துவங்கியது.
கண்காட்சியைத் துவக்கி வைத்து, பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது:
உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டோம். ஏற்றுமதியும் செய்கிறோம். உற்பத்தியும், உற்பத்தித் திறனும் அதிகரித்து விட்டன. ஆனால், உழவனின் நிலை திருப்தியாக இல்லை. 'எல்லாம் காத்திருக்கட்டும்; விவசாயம் காத்திருக்கக்கூடாது' என்றார் நேரு. விவசாயின் வாழ்வாதாரம் உயர வேண்டும். 1991ல் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டபோது, வேளாண் துறையை முதலில் செய்திருக்க வேண்டும்; தவறவிட்டுவிட்டோம். வேளாண் துறையில் நிறைய புரட்சிகள் நடந்து விட்டன.
ஆனால், விவசாயிக்கான வருவாய் அதிகமாக உயர வேண்டும். நகரங்களில் மக்கள்தொகை பெருகுகிறது. நகரை நோக்கி இடம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும். அதை நோக்கி நாம் நகர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
வேளாண் பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் பேசியதாவது:
இந்தியா விடுதலை அடைந்தபோது நமது உணவு உற்பத்தி 51 மில்லியன் டன். தற்போது 354 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. பஞ்சம், பட்டினி இல்லை. வேளாண் தொழில்நுட்பங்களும், இயந்திரமயமாக்கலும் வளர்ந்துள்ளன.
தமிழ்நாடு வேளாண் பல்கலை ஏதாவது ஒரு வகையில் விவசாயிகளுடன் தொடர்பில் இருக்கிறது.
வேளாண் பல்கலை இதுவரை 948 புதிய ரகங்களையும், 1,500 தொழில்நுட்பங்களையும் உருவாக்கி வெளியிட்டுள்ளது. 117 பண்ணைக் கருவிகளை உருவாக்கியுள்ளோம்.
நானோ தொழில்நுட்பம், ஏ.ஐ., என நவீன தொழில்நுட்பங்களில் ஆய்வு மேற்கொள்கிறோம். பாரம்பரிய ரகங்களை, தேவைக்கேற்ப புதுப்பிக்கிறோம். கோ 59 நெல் ரகம் அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான்.
உணவு தானிய உற்பத்தியில் 10 சதவீத இழப்பு நோய் மற்றும் பூச்சி தாக்குதலால் நிகழ்கிறது. பருவநிலை மாறுபாடுகளும் சவாலாக உள்ளன. தமிழகத்தில் 365 ஒன்றியங்களில் தலா 1 கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 'கிளைமேட் ஸ்மார்ட் வில்லேஜ்' செயல்படுத்தப்படுகிறது. வரும் 2050ல் பருவநிலை மாறுபாடு எவ்வாறு இருக்கும் எனக் கணித்து, அதற்கேற்ப விவசாய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவது இத்திட்டத்தின் நோக்கம்.
விவசாயிகளுக்கு ஆப் வாயிலாக, அனைத்துத் தகவல்களும் கிடைக்கச் செய்கிறோம். அக்ரிகார்ட் இணையதளம் வாயிலாக, ஆன்லைனில் வேளாண் இடுபொருட்கள் அனைத்தும் கிடைக்கிறது. வேளாண் பல்கலை இதுவரை 643 ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும், 2034 தொழில்முனைவோரையும் உருவாக்கியுள்ளது. இந்திய வேளாண் துறையில் தமிழக வேளாண் பல்கலை மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
டில்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக முதன்மை விஞ்ஞானி சிங் பேசியதாவது:
வரும் 2047ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்ட, நமது பொருளாதாரம் 30 டிரில்லியன் அளவுக்கு வளர வேண்டும். தற்போது 4.3 டிரில்லியனாக உள்ளது.
இந்த இலக்கை எட்ட, வேளாண் துறையின் வளர்ச்சி 4 சதவீதமாக இருக்க வேண்டும். தற்போது 2.9 சதவீதமாக உள்ளது. வேளாண் துறையில் இயந்திரமயமாக்கல் வேகமாக நடைபெற வேண்டும். தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க இது கட்டாயம். தற்போது 47 சதவீதமாக உள்ள இயந்திர பயன்பாடு, 2047ல் 75 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். மேலும், ஹெக்டருக்கு மின் நுகர்வு 3.02 கிலோவாட்டில் இருந்து 8 கிலோவாட்டாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கண்காட்சி வளாகத்தில் 6 அரங்குகளில் 600 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. விவசாயம் சார்ந்த அனைத்துத்துறைகளிலும் தொழில்நுட்பங்கள், உபகரணங்கள், இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விதை முதல் வேலி வரை வேளாண் நடவடிக்கைகளுக்கான அனைத்தும் ஒரே கூரையின் கீழ் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் வேளாண் கருத்தரங்கும் நடக்கிறது.