/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.எஸ்.எம்.இ.,களுக்கு நிதி இடைவெளியை... நிரப்பணும்!:மத்திய நிதியமைச்சரிடம் கொடிசியா பரிந்துரை
/
எம்.எஸ்.எம்.இ.,களுக்கு நிதி இடைவெளியை... நிரப்பணும்!:மத்திய நிதியமைச்சரிடம் கொடிசியா பரிந்துரை
எம்.எஸ்.எம்.இ.,களுக்கு நிதி இடைவெளியை... நிரப்பணும்!:மத்திய நிதியமைச்சரிடம் கொடிசியா பரிந்துரை
எம்.எஸ்.எம்.இ.,களுக்கு நிதி இடைவெளியை... நிரப்பணும்!:மத்திய நிதியமைச்சரிடம் கொடிசியா பரிந்துரை
ADDED : டிச 15, 2025 05:39 AM

கோவை,:எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு வங்கி சார்ந்த நிதிச்சேவைகளில் பெரும் இடைவெளி இருக்கிறது. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க, நிதி இடைவெளியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என, மத்திய பட்ஜெட் தொடர்பான தொழில்துறையினரின் பரிந்துரைகளாக, மத்திய நிதியமைச்சரிடம் 'கொடிசியா' முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக, கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:
இந்தியாவில் மொத்தம் 7.34 கோடி எம்.எஸ்.எம்.இ.,கள் உள்ளன. ஆனால், இந்நிறுவனங்களின் வங்கிக் கடன் கணக்குகள் 2.48 கோடிதான் உள்ளன. வங்கிசாரா நிதி நிறுவனங்களில் 60 லட்சம் கடன் கணக்குகள் உள்ளன. ஒரு நிறுவனத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கடன் கணக்குகள் இருக்கலாம். இந்த புள்ளிவிவரத்தின்படி, பெரும்பான்மை எம்.எஸ்.எம்.இ.,கள், வங்கிக் கடன் நடைமுறைகளுக்குள்ளேயே வரவில்லை என்பது தெரிகிறது.
என்.டி.சி., எனப்படும் புதிதாக கடன் வாங்கும் நிறுவனங்கள் குறித்த ஆர்.பி.ஐ., தரவுகளின்படி கடந்த 2024-25ம் நிதியாண்டில் வெறும் 11.75 லட்சம் நிறுவனங்கள் தான் புதிதாக கடன் பெற்றுள்ளன. இந்த கடன் தொகை, ரூ.1.75 லட்சம் கோடி.
எம்.எஸ்.எம்.இ.,களுக்கான கடன் நிதி ஒதுக்கீடு 32.93 லட்சம் கோடி. ஆனால், நிதி இடைவெளி மிக அதிகமாக உள்ளது. அதாவது கொடுக்க திட்டமிடப்பட்டு ஒதுக்கிய தொகைக்கும் கொடுத்த கடனுக்கும் உள்ள வேறுபாடுதான் நிதி இடைவெளி (பண்டிங் கேப்). இது, 2016ம் ஆண்டில் ரூ.25 லட்சம் கோடியாக இருந்து, 2025ல் ரூ.30 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஆண்டுக்கு புதிதாக ரூ.1.75 லட்சம் கோடி மட்டுமே கடன் வழங்கினால், இந்த நிதி இடைவெளியைச் சரி செய்ய 10 ஆண்டுகளுக்கும் மேல் தேவைப்படும்.
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு கடன் சென்றடைவதை உறுதி செய்ய வங்கிகளும் இதர அரசுத் துறைகளும் எவ்வித முயற்சியையும் எடுக்காததையே இந்த தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஆண்டுக்கு புதிதாக 1 கோடி எம்.எஸ்.எம்.இ.,களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துச் செயல்பட்டால் மட்டுமே இந்த நிதி இடைவெளியைச் சரி செய்ய முடியும்.
ஆர்.பி.ஐ.,யின் 30வது ஆலோசனை நிலைக்குழு (எஸ்.ஏ.சி.,) கூட்டம் சமீபத்தில் கோவையில் நடந்தது. அங்கும் கொடிசியா சார்பில் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது.
தற்போது, மத்திய பட்ஜெட் தொடர்பான தொழில்துறையின் பரிந்துரைகளாக, மத்திய நிதியமைச்சர், நிதியமைச்சக அதிகாரிகளிடமும் கொடிசியா தரப்பில் வலியுறுத்தியுள்ளோம். வரும் பட் ஜெட்டில், நமது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

