/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கமேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா
/
சங்கமேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா
ADDED : நவ 03, 2024 11:00 PM
கோவை; கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த நவ., 2 அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்று சுப்ரமணிய சுவாமி கிடா வாகனத்தில் எழுந்தருளி கோவில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அன்றாடம் மாலை 6:30 மணிக்கு சுப்ரமணி சுவாமி குறித்த ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது. இன்று மாலை முருகன் பெருமை சொற்பொழிவும், நாளை மாலை திருப்புகழ் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
நாளை மறுதினம் புதன்கிழமை மாலை தேவார திருமுறை இசை நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 7 அன்று காலை 10:00 மணிக்கு கந்தசஷ்டி மஹா அபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹாரமும், நவ., 8 அன்று திருக்கல்யாண வைபவமும், திருக்கல்யாண விருந்தும் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி பெருவிழாவின் போது சூரசம்ஹாரத்தை தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்நடைமுறையை மாற்றி சூரசம்ஹாரத்துக்கு அடுத்த நாள் நவ.,8 அன்று காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண வைபம் நடப்பதாக கோவில் அழைப்பிதழிலும் நோட்டீசிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. பாரம்பரியமாக நடக்கும் நடைமுறையை மாற்றக்கூடாது என்று கோட்டை ஈஸ்வரன் கோவில் பக்தர்கள் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி அவர்கள் விருப்பப்படி நடத்த உத்தரவிட்டார். இதற்கு பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.