/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல வித வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை
/
பல வித வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை
ADDED : ஆக 24, 2025 11:39 PM

- நிருபர் குழு -
வீடுகளில் சதுர்த்தி விழா கொண்டாட, கண்ணை கவரும் வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியான, வரும் 27ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும், வீடுகளில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து, படையல்கள் செய்து படைத்து, வழிபடுவது வழக்கம்.
அவ்வகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பெரும்பாலான வீடுகளில், சிலைகளை பிரதிஷ்டை செய்து, சிறப்பு அபிேஷகம் செய்து, பல்வகை பதார்த்தங்களை படைத்து வழிபடுகின்றனர். அதற்காக, மண்ணால் செய்த சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
பொள்ளாச்சி நகரை சுற்றியுள்ள முக்கிய ரோடுகளில், மண்ணால் செய்த சிலைகள், விற்கப்பட்டும் வருகின்றன.
குறிப்பாக, எலி மீது விநாயகர், டிராகன் வடிவ வாகனத்தில் விநாயகர், 2 மாடுகள் மற்றும் ஏர் கலப்பையுடன் உழவுப் பணி செய்யும் விநாயகர், நந்தி, மான், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அமர்ந்திருப்பது என, பல்வேறு வடிவமைப்பில் விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன.
இந்த சிலைகள், 50 ரூபாயில் துவங்கி, 1,000 ரூபாய் வரை, பல்வேறு விதங்கள் மற்றும் வண்ணங்களில் உள்ளது. விநாயகர் அலங்கார பொருட்கள் விற்பனையும், சிறிய சந்தன மாலைகள் விற்பனையும் பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
உடுமலை உடுமலை பகுதியில், விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொது இடங்களில் பிரதிஷ்டை செய்வதுடன், வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்கின்றனர்.
இதற்காக உடுமலை பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல இடங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிலைகளின் உயரத்தை பொறுத்து, 200 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது. சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.