/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரோடையில் குப்பை குவிப்பு; பொதுசுகாதாரம் பாதிப்பு!
/
நீரோடையில் குப்பை குவிப்பு; பொதுசுகாதாரம் பாதிப்பு!
நீரோடையில் குப்பை குவிப்பு; பொதுசுகாதாரம் பாதிப்பு!
நீரோடையில் குப்பை குவிப்பு; பொதுசுகாதாரம் பாதிப்பு!
ADDED : ஏப் 28, 2025 04:13 AM

சாய்ந்தது பிளக்ஸ் கம்பம்
வடக்கிபாளையத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டின் ஓரத்தில் பிளக்ஸ் வைக்கும் கம்பம் சாய்ந்துள்ளது. இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் தவறுதலாக இதன் மீது மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
-- டேவிட், பொள்ளாச்சி.
சேதமடைந்த ரோடு
பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி அருகே, ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வழியில் வரும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவது உடன், அடிக்கடி விபத்து நடக்கவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் இந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
- மாணிக்கம், பொள்ளாச்சி.
போலீஸ் கண்காணிப்பு தேவை
பொள்ளாச்சி நகராட்சி, 21வது வார்டு, ராமகிருஷ்ணன் புரம் பகுதியில், தினமும் இரவு நேரத்தில் விநாயகர் கோவில் அருகே சிலர் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகின்றனர். மக்கள் நலன் கருதி போலீசார் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- பாலாஜி, பொள்ளாச்சி.
நீரோடையில் குப்பை
கிணத்துக்கடவு -- கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில், ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள மாமாங்கம் நீரோடையில், அதிகளவு குப்பை தண்ணீரில் மிதக்கிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து, துர்நாற்றம் ஏற்படுகிறது. சுகாதாரமும் பாதித்துள்ளது. நீரோடையில் குப்பை கொட்டுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, நீரோடையை சுத்தம் செய்ய வேண்டும்.
- கார்த்தி, கிணத்துக்கடவு.
திறக்கப்படாத கழிப்பிடம்
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், வாகன பார்க்கிங் பகுதி அருகே, தனியார் நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட கழிப்பிடம் மக்கள் பயன்பாடு இன்றி பூட்டப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, கழிப்பிடத்தை ரயில்வே நிர்வாகம் விரைவில் திறக்க வேண்டும்.
- கோகுல், கிணத்துக்கடவு.
மழைநீரை அகற்றணும்
உடுமலை நேதாஜி மைதானத்தில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கிக்கிடக்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மைதானத்தில் தேங்கியுள்ள நீரை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.
குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை, பார்க் ரோடு அரசு பள்ளி அருகே குப்பைக்கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், அப்பகுதியில் மிகுதியான புகை பரவுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், பள்ளி குழந்தைகளும் புகையால் அவதிப்படுகின்றனர்.
- ஜெயசந்திரன், உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, பெரியகடை வீதியில் வாகனங்கள் தாறுமாறாக ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. மாலை நேரங்களில் அவ்வழியாக பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாத நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- சித்ரா, உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, பழனியாண்டவர் நகர் ரோட்டில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. மாலை நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். ரோட்டில் மேடுபள்ளமாக இருப்பதால் இருள் சூழ்ந்திருக்கும் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- சுகுமார், உடுமலை.
'லொள்' தொல்லை
உடுமலை, சீனிவாசா வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.குடியிருப்புகளின் முன் கூட்டமாக சுற்றுவதால் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு பெற்றோர் அச்சப்படுகின்றனர். குப்பைக்கழிவுகளையும் இழுத்துவந்து பரப்பிவிடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- நவநீதன், உடுமலை.
செடிகளை காப்பாற்றுங்க
உடுமலை - பழநி ரோட்டில் சென்டர் மீடியனில் செடிகள் அமைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாததால், அவை வாடி, வதங்கி வருகின்றன. செடிக்கு நகராட்சி சார்பில் தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.