/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை அள்ளும் பணி: மீண்டும் தனியாருக்கு அனுமதி!
/
குப்பை அள்ளும் பணி: மீண்டும் தனியாருக்கு அனுமதி!
ADDED : செப் 14, 2024 11:04 PM
கோவை: கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணியை மீண்டும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க டெண்டர் கோருவதற்கு, மாமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
கோவை மாநகர பகுதியில் குப்பை சேகரிக்கும் பணி, தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு டன்னுக்கு ரூ.3,143.05 வீதம் நாளொன்றுக்கு, 1,250 டன் குப்பை சேகரிக்க, 39 லட்சத்து, 29 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு, 170 கோடியே, 65 லட்சத்து, 61 ஆயிரம் ரூபாய் வழங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. அந்த ஒப்பந்தம், ஆக., 17ல் முடிந்து விட்டது. புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை மூன்று மாதத்துக்கு கால நீட்டிப்பு வழங்க, மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
தீர்மானம்
வழக்கமாக, ஒப்பந்த நிறுவனத்துக்கு, துாய்மை பணியாளர்கள் ஊதியம், இ.எஸ்.ஐ., - பி.எப்., மற்றும் வாகனங்களுக்கான எரிபொருள் செலவு, வாகன பராமரிப்பு செலவு சேர்த்து, 50 சதவீத தொகை மட்டுமே விடுவிக்கப்படும். இத்தொகை போதுமானதாக இல்லை என கூறியதால், 20 சதவீதம் கூடுதலாக வழங்குவதற்கு பின்னேற்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ள, 'சதர்ன் சாலிடு மேனேஜ்மென்ட் சர்வீஸ்' என்கிற நிறுவனம் ஒப்பந்த விதிமுறைப்படி துாய்மை பணி மேற்கொள்ளவில்லை; குப்பை அகற்ற வாகனங்கள் சரிவர வழங்கவில்லை; வாகன பழுதை உடனுக்குடன் பழுது நீக்காமல் பணியில் மெத்தனமாக செயல்பட்டு துாய்மை பணியில் தேக்கம் ஏற்பட்டதால், மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு இருப்பதாக மன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புதிய டெண்டர்
மேலும், மாநகராட்சியில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு பிரிவுக்கு குப்பை தேக்கம் தொடர்பான புகார்கள் மிகுதியாக வருகின்றன.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அனுப்பிய நோட்டீசுக்கு, அந்நிறுவனம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
அதனால், பொது சுகாதார பணியின் அவசரம் கருதி, உடனடியாக புதிய டெண்டர் கோர, பொறியியல் பிரிவினருக்கு கோப்பு அனுப்ப, மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.