/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வார்டுகளில் குப்பை அள்ளும் பணிகள் திடீர் வேகம்!: கவுன்சிலர்களால் துப்புரவு ஊழியர் கடுப்பு
/
வார்டுகளில் குப்பை அள்ளும் பணிகள் திடீர் வேகம்!: கவுன்சிலர்களால் துப்புரவு ஊழியர் கடுப்பு
வார்டுகளில் குப்பை அள்ளும் பணிகள் திடீர் வேகம்!: கவுன்சிலர்களால் துப்புரவு ஊழியர் கடுப்பு
வார்டுகளில் குப்பை அள்ளும் பணிகள் திடீர் வேகம்!: கவுன்சிலர்களால் துப்புரவு ஊழியர் கடுப்பு
UPDATED : ஜன 23, 2026 11:06 PM
ADDED : ஜன 23, 2026 05:11 AM

கோவை: சட்டசபை தேர்தல் நெருங்குவதால் வார்டுகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த மிரட்டி வேலை வாங்குவதாக கவுன்சிலர்கள் மீது துப்புரவு பணியாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் தினமும் 1,250 டன் குப்பை சேர்கிறது. குப்பை சேகரிக்கும் பணி 2 ஆண்டுக்கு முன் தனியார் வசம் அளிக்கப்பட்டதில் இருந்தே துப்புரவு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகாததால் அவர்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
குப்பை அகற்றுவது தவிர அவ்வப்போது வேறு வேலைகளும் கொடுக்கப்படுவது ஊழியர்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது. அது அவர்களின் அன்றாட பணியில் பிரதிபலிப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக, நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பை குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதால், பொதுமக்களின் மனநிலையை தெரிந்து சொல்லுமாறு திமுக மேலிடம் அனைத்து நிர்வாகிகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. நிர்வாகிகள் அவரவர் பகுதியில் சுற்றி வரும்போது, குப்பையை சுட்டிக் காட்டி மக்கள் கொதிக்கின்றனர். இதனால் திமுக நிர்வாகிகள் பழியை கவுன்சிலர்கள் மீது சுமத்தி மேலிடத்துக்கு புகார் அனுப்பினர்.
ஒவ்வொரு கவுன்சிலரும் தனது வார்டில் தினமும் நடந்து சென்று மக்களை சந்திக்கும்படியும், துப்புரவு பணியாளர்களை மேற்பார்வையிட்டு குப்பை அகற்றும் வேலையை கண்காணிக்கும்படியும் தி.மு.க. மேலிடம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கும் நேரத்தில் மக்களிடம் அரசுக்கு எதிரான மனநிலை இருந்தால், கவுன்சிலர்களே பொறுப்பு என்றும் எச்சரித்துள்ளது.
இதை தொடர்ந்து, குப்பை அகற்றும் பணி வேகம் பிடித்துள்ளது. மாதக்கணக்கில் தேங்கி இருந்த குப்பைகள் கூட அவசரமாக அகற்றப்படுகின்றன. குப்பை லாரிகள் போவதும் வருவதுமாக சுறுசுறுப்பாக இயங்குகின்றன. இதனால், பொதுமக்களின் கோபம் குறைந்து வருகிறது. ஆனால், துப்புரவு ஊழியர்கள் கடுப்பாகி உள்ளனர்.
''காலை 6 முதல் மதியம் 2 மணி வரை ஓய்வு இல்லாமல் வேலை செய்கிறோம். 200 வீடுகளுக்கு சென்று குப்பை சேகரிக்கிறோம். இது போதாது என்று சிறப்பு பணி என்ற பெயரில் மேற்பார்வையாளர்களை வைத்து கவுன்சிலர்கள் எங்களிடம் வேலை வாங்குகின்றனர். பணிச்சுமையால் திணறும் எங்களை கவுன்சிலர்கள் அரசியல் ஆதாயத்துக்காக வாட்டி வதைக்கின்றனர். மிரட்டுகின்றனர்” என குமுறுகின்றனர்.

