/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரோடையில் குப்பை; சுகாதாரம் பாதிப்பு
/
நீரோடையில் குப்பை; சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஜூலை 14, 2025 08:02 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோட்டில் உள்ள நீரோடையில் தேங்கி நிற்கும் குப்பையை அகற்ற வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் மாமாங்கம் நீரோடை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு, இந்த நீரோடையில் மழைநீர் தேங்கியுள்ளது.
இவ்வழியாக, நாள்தோறும் ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் போது, பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பையை நீரோடையில் வீசி செல்கின்றனர். இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், தண்ணீரின் மேற்பரப்பில் பிளாஸ்டிக் கழிவு மிதந்த படி உள்ளது. இதனால் தண்ணீர் மாசடைவதுடன், அருகில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், இந்த நீரோடையை சமூக ஆர்வலர்கள் தூய்மைப்படுத்தினர். தற்போது, மீண்டும் குப்பை நிறைந்து காணப்படுவதால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, இங்கு குப்பை கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.