செயல்படாத கல்குவாரி குழியில் மூட்டை மூட்டையாக குப்பை
செயல்படாத கல்குவாரி குழியில் மூட்டை மூட்டையாக குப்பை
UPDATED : அக் 27, 2026 06:42 PM
ADDED : அக் 27, 2026 06:36 PM

கிணத்துக்கடவு: வடபுதூர் ஊராட்சி பகுதியில், செயல்படாத கல்குவாரி குழியில் குப்பை குவிக்கப்படுவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் தனி நபர் ஒருவர், கல்குவாரி நடத்தினார். இந்த குவாரி உரிமம் கடந்த 2024ல் முடிந்தது. அதன் பின், முறையாக வேலி அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன், குவாரி குழியில் மூட்டை மூட்டைகளாக பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவை மர்மநபர்கள் கொட்டி உள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறியதாவது:
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பல குவாரிகள் விதிமீறி செயல்பட்டது. இந்நிலையில், வடபுதுார் குவாரி உரிமம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அங்கு, மர்மநபர்கள் குப்பை குவித்துள்ளனர்.
இதுகுறித்து, வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாரி உரிமம் முடிந்ததும், முறையாக வேலி அமைக்கவில்லை. இதனால், குப்பையை எளிதாக வீசி செல்கின்றனர். வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
