கிராமங்களில் குவிந்து கிடக்குது குப்பை: அகற்றாததால் சுகாதாரம் பாதிப்பு
கிராமங்களில் குவிந்து கிடக்குது குப்பை: அகற்றாததால் சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஏப் 17, 2026 03:43 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் குப்பையை அகற்றம் செய்ய வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், வீடு தோறும் குப்பை சேகரித்து அகற்றம் செய்ய தூய்மை பணியாளர்கள் உள்ளனர். சில கிராமப்புற பகுதிகளில் பொதுமக்கள் செல்லும் பிரதான ரோட்டின் ஓரத்தில் அதிக அளவில் குப்பை கொட்டி செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதில், நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைக்குளம் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே ரோட்டில் ஓரத்தில் அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதில், பெரும்பாலும் பிளாஸ்டிக் குப்பை கொட்டப்பட்டு இருப்பதால், வெயிலின் தாக்கத்தால் எளிதில் தீப்பிடிக்கும் நிலை உள்ளது, என, அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். மேலும், இதே பகுதியில் ஓராண்டுக்கு முன் குப்பையில் தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
* வடபுதூர் ஊராட்சி, சிக்கலாம்பாளையம் அரசு டாஸ்மாக் மதுபான கடை செல்லும் ரோட்டின் ஓரத்தில் குப்பை குவியலாக உள்ளது. இதன் எதிர் திசையில் குப்பை தரம் பிரிப்பு கூடாரம் உள்ளது. இதன் எதிரே குப்பை கொட்டி இருப்பதை கண்ட மக்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், இங்கு குப்பை கொட்டுவதை தவிர்க்க ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வடசித்தூரில் இருந்து நெகமம் செல்லும் ரோட்டில் கப்பளாங்கரையிலும் ரோட்டோரத்தில் நீண்ட தூரத்திற்கு குப்பை கொட்டிக் கிடக்கிறது. இப்பகுதியை வாகனம் ஓட்டுநர்கள் கடக்கும்போது கடும் துர்நாற்றம் வீசுவதால் அவதிப்படுகின்றனர்.
எனவே, பொதுவெளியில் குப்பை மற்றும் இதர கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒன்றிய அதிகாரிகள் கேட்டபோது, 'மக்களிடம் குப்பை சேகரித்து, மக்கும், மக்காத குப்பையை தரம் பிரிக்க வேண்டும் என, ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. துாய்மை பணியாளர்களிடம் குப்பை வழங்காமல், பொதுவெளியில் கொடக்கூடாது. ஊராட்சி துாய்மை பணியாளர்களும் குப்பையை முறையாக கையாள வேண்டும்,' என்றனர்.
