தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பணியாளர் பற்றாக்குறையால் தேங்கும் குப்பை: பிரச்னைகளுக்கு எப்போது வரும் ‘குட்–பை’

பணியாளர் பற்றாக்குறையால் தேங்கும் குப்பை: பிரச்னைகளுக்கு எப்போது வரும் ‘குட்–பை’

பணியாளர் பற்றாக்குறையால் தேங்கும் குப்பை: பிரச்னைகளுக்கு எப்போது வரும் ‘குட்–பை’


UPDATED : அக் 15, 2026 06:11 PM

ADDED : அக் 15, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 06:11 PM ADDED : அக் 15, 2026 06:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: ‘‘வார்டில் உள்ள வீதிகள் சுத்தம் இல்லாமல் இருப்பதற்கும், பொதுமக்கள் போடும் குப்பைகளையும் சுத்தம் செய்யாமல் இருப்பதற்கும், தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம், என, மேட்டுப்பாளையம் நகராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலர் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகரின் ஒரு பகுதியில் பவானி ஆறு ஓடுகிறது. ஆற்றில் இருந்து நகராட்சிக்கு தேவையான குடிநீர் எடுக்கப்படுகிறது. பவானி ஆற்றின் மேற்கு பகுதியில் நகராட்சியின் முதல் வார்டு உள்ளது. வார்டில், ராமசாமி நகர், இந்திரா நகர், கோத்தகிரி சாலை, நரி பள்ளம், தண்ணீர் துறை வீதி, ரஹ்மானியா கார்டன் உட்பட 10க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. அனைத்து குடியிருப்பு பகுதிகளும், பவானி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளன. வார்டில், துாய்மை பணிகள் முறையாக நடப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராஜாசிங் கூறுகையில், ‘‘முதல் வார்டு, பாலப்பட்டி சாலையில், 33 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறேன். வார்டில் உள்ள வீதிகளில் குப்பையை அகற்ற வேண்டும். சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும். இப்பணிகள் சீராக நடந்தால், வார்டு சுத்தமாக இருக்கும்,’’ என்றார்.

ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘மின்சாரம் தயாரிக்க கதவனை கட்டி நீரை தேக்கிய போது, நகரின் ஒட்டுமொத்த கழிவு நீரும் ஆற்றில் தேங்கி இருப்பதால், நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும். பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தை அகற்ற வேண்டும்,’’ என்றார்.

வார்டு கவுன்சிலர் தஸ்னீமா பேகம் கூறியதாவது:

வார்டில், பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வீதிகளில் உள்ள குப்பையை சுத்தம் செய்யவும், சாக்கடைகளில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றவும், போதிய துாய்மை பணியாளர்கள் இல்லை. மக்கள், சாலையோரத்தில் போடும் குப்பையை அகற்ற ஆட்கள் இல்லாத நிலை நகராட்சியில் ஏற்பட்டுள்ளது. இதனால், ஊமப்பாளையம் செல்லும் சாலையிலும், கோத்தகிரி சாலையில் பாதி அளவுக்கு மேல் குப்பை தேங்கியுள்ளது. கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. பிள்ளையார் கோவில் வீதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரை, சுத்தம் செய்ய ஆட்கள் வருவதில்லை. கோத்தகிரி சாலையில் அருகே புதிதாக அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதைச் சுற்றி இன்னும் காம்பவுண்ட் சுவர் அமைக்கவில்லை. காம்பவுண்ட் சுவர் அமைக்காமல் இருந்தால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்.

வார்டில் உள்ள இந்து மயானத்தின் காம்பவுண்ட் சுவர் இடிந்துள்ளது. நுழைவாயிலில் கேட் அமைத்து மயானத்தை சுத்தம் செய்யும்படி, மன்றக் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சுகாதாரம் இல்லாத நிலை இருப்பதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், குப்பைகளை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us