ADDED : ஜன 24, 2026 04:45 AM

வால்பாறை: வால்பாறையில், திறந்தவெளியில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகள் தனியார் எஸ்டேட்களாக இருப்பதால், அங்கு நகராட்சி சார்பில் குப்பை தரம் பிரித்து பெறுவதில்லை.
வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறுநகர், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் மட்டும் நகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கப்படுகிறது.
இந்நிலையில் வால்பாறை நகரில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகள், ஸ்டேன்மோர் ரோட்டில் உள்ள திறந்தவெளி குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது.
இந்நிலையில் நகராட்சி அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி சிலர் திறந்த வெளியில் குப்பை குவிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் நடக்கிறது. ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் வெளியாகும் குப்பையை தரம் பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
ஆற்றில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். சுற்றுப்புற சுகாதாரத்திற்கு சீர்கேடு விளைவிக்கும் வகையில், திறந்தவெளியில் குப்பை கொட்டினால், அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
சுற்றுலா பயணியர் குப்பையை திறந்தவெளியில் கட்டுப்பாடின்றி வீசுவதை தவிர்க்க வேண்டும். அந்தந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிறிய குப்பை தொட்டிகளில் கொட்ட வேண்டும். வீணாகும் உணவு பொருட்களை திறந்த வெளியில் வீசக்கூடாது.
இவ்வாறு, கூறினர்.
