/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை மாற்று நிலைய பிரச்னை தீர்ந்தது.. பேச்சில் சுமூகம்! புதிதாக 3 இடங்களில் கட்டுவதற்கு 'டெண்டர்'
/
குப்பை மாற்று நிலைய பிரச்னை தீர்ந்தது.. பேச்சில் சுமூகம்! புதிதாக 3 இடங்களில் கட்டுவதற்கு 'டெண்டர்'
குப்பை மாற்று நிலைய பிரச்னை தீர்ந்தது.. பேச்சில் சுமூகம்! புதிதாக 3 இடங்களில் கட்டுவதற்கு 'டெண்டர்'
குப்பை மாற்று நிலைய பிரச்னை தீர்ந்தது.. பேச்சில் சுமூகம்! புதிதாக 3 இடங்களில் கட்டுவதற்கு 'டெண்டர்'
ADDED : நவ 14, 2024 11:25 PM

கோவை : உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குப்பை மாற்று நிலையத்தில், லாரிகள் தேங்கி நின்றதால், வெள்ளலுாருக்கு எடுத்துச் செல்வது தாமதமானது; வார்டுகளுக்குள் மீண்டும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. தனியார் நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் பேச்சு நடத்தியதும், இப்பணி வேகமெடுத்தது. அடுத்த கட்டமாக, ரூ.30 கோடியில் மூன்று இடங்களில் புதிதாக குப்பை மாற்று நிலையங்கள் கட்டும் பணிக்கு 'டெண்டர்' கோரப்படுகிறது.
கோவை மாநகரப் பகுதியில் உருவாகும் குப்பையை சேகரிக்க ஒரு தனியார் நிறுவனம்; வெள்ளலுார் கிடங்கில் அவற்றை கையாள இன்னொரு தனியார் நிறுவனத்துடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்திருக்கிறது. சேகரிக்கும் குப்பையை, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குப்பை மாற்று நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். அங்கிருந்து வெள்ளலுாருக்கு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் கொண்டு செல்லும்.
மந்தம்
கடந்த சில நாட்களாக, உக்கடம் குப்பை மாற்று நிலையத்தில் இருந்து வெள்ளலுாருக்கு எடுத்துச் செல்லும் பணி மந்தமாக நடந்தது; குப்பை சேகரித்துச் சென்ற வாகனங்கள், புல்லுக்காடு பகுதியில் வரிசையாக தேங்கி நின்றன. இவ்வாகனங்கள் குப்பையை கொட்டி விட்டு, மீண்டும் வீதிக்குள் செல்ல வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது 'டிரிப்' செல்லாமல், குப்பை மாற்று நிலையம் முன், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நின்றிருந்தன. அதன் காரணமாக, வீதிகளில் குப்பை அள்ள முடியாமல் தேங்க ஆரம்பித்தது. உக்கடத்தில் இருந்தும் வெள்ளலுாருக்கு குப்பை எடுத்துச் செல்ல முடியவில்லை.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி, குப்பை மாற்று நிலைய நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்தினர். அதில், குப்பை மாற்று நிலையத்துக்கு மாநகராட்சியில் இருந்து, ஒப்பந்தப்படி பணம் விடுவிக்காமல் இருப்பது தெரியவந்தது.
நிலுவை தொகை
இவ்வகையில் மட்டும், இந்நிதியாண்டில், ஏப்., முதல் ஆக., வரை ரூ.27.71 கோடி வழங்கியிருக்க வேண்டும். மாநகராட்சியில் இருந்து, ரூ.10.13 கோடி மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. நிலுவை தொகையில் ஒரு பகுதியை விடுவிக்க மாநகராட்சி தரப்பில் உறுதியளித்ததும், வாகனங்களில் தேங்கியிருந்த குப்பையை உடனுக்குடன் மாற்றி, வெள்ளலுாருக்கு எடுத்துச் செல்லும் பணி வேகப்படுத்தப்பட்டன; நேற்று மாலை, 5:00 மணியளவில் ஐந்து வாகனங்கள் மட்டுமே நின்றிருந்தன.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
உக்கடம் குப்பை மாற்று நிலையத்தில் கையாளும் திறன் குறைவு. ஆறு இடங்களில் குப்பை மாற்று நிலையம் தேவை. தற்போது இரு இடங்களில் மட்டுமே செயல்படுகிறது. அதனால், தாமதம் ஏற்பட்டாலும், அழுத்தம் கொடுத்து, குப்பை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
புதிதாக மூன்று இடங்களில் தலா ரூ.10 கோடி வீதம், ரூ.30 கோடியில் குப்பை மாற்று மையங்கள் கட்டப்படும்; சத்தி ரோட்டில் கட்டும் பணி நடந்து வருகிறது. இவை பயன்பாட்டுக்கு வரும்போது, உடனுக்குடன் குப்பை சேகரிக்கப்பட்டு, கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படும். குப்பை மாற்று மையங்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டால், வீதிக்குள் வாகனங்கள் மீண்டும் செல்ல முடியும்; இரண்டு மணி நேரத்துக்குள் குப்பை சேகரிக்க முடியும். இம்மூன்று மையங்கள் பயன்பாட்டுக்கு வர ஓராண்டாகும்.
இவ்வாறு, அவர் கூறினர்.