/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகளை அலங்கரிக்கும் 'ஜிமிக்கி!' மாட்டு பொங்கலுக்கு விற்பனை 'ஜோர்'
/
கால்நடைகளை அலங்கரிக்கும் 'ஜிமிக்கி!' மாட்டு பொங்கலுக்கு விற்பனை 'ஜோர்'
கால்நடைகளை அலங்கரிக்கும் 'ஜிமிக்கி!' மாட்டு பொங்கலுக்கு விற்பனை 'ஜோர்'
கால்நடைகளை அலங்கரிக்கும் 'ஜிமிக்கி!' மாட்டு பொங்கலுக்கு விற்பனை 'ஜோர்'
ADDED : ஜன 15, 2024 10:37 PM

கோவை;மாட்டு பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ரேக்ளா மாடுகள், கறவை மாடுகளுக்கு தனித்தனியே வண்ணக் கயிறுகள், சலங்கை, ஜிமிக்கி அணிகலன்கள் சந்தையில் நேற்று ஜோராக விற்பனையாகின.
பொங்கல் பண்டிகையானது போகி, சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என, ஒவ்வொரு நாளும் தனி சிறப்பை கொண்டுள்ளது. இதில், மாட்டு பொங்கலானது விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி, பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது.
இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, வண்ணக் கயிறுகள், 'ஜல் ஜல்' ஒலி எழுப்பும் சலங்கைகள், ஜிமிக்கி உள்ளிட்ட அணிகலன்களால் விவசாயிகள் அலங்கரிப்பர்.
இந்நிலையில், மாடுகளுக்கு தேவையான கழுத்து கயிறு, மூக்கணாங் கயிறு, திருஷ்டிக்கான கருப்பு கயிறு உள்ளிட்டவை பல வண்ணங்களில் டவுன்ஹால், ஆர்.ஜி., வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட இடங்களில் ஜோராக விற்பனையாகி வருகிறது. ஒலி எழுப்பும் மணி வகைகள், அணிகலன்கள் காண்போரை கவர்ந்து வருகிறது.
பெரிய கடை வீதி வியாபாரிகள் கூறியதாவது:
மாட்டு பொங்கலன்று, குடும்பத்தில் ஒன்றாக கருதப்படும் கால்நடைகளை அலங்கரித்து விவசாயிகள் அழகு பார்ப்பர். இதற்கென, ரேக்ளா மாடுகள், சாதாரண மாடுகளுக்கு என, தனித்தனியே கயிறு, அணிகலன்கள் நேற்று அதிகமாக விற்பனை ஆனது.
இந்தாண்டு, மாராப்பு கயிறு அதிகம் விற்பனையாகி வருகிறது. பொள்ளாச்சி பகுதிகளில் ரேக்ளா மாடுகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் தரப்படும்.
இங்கு, கறவை மாடு, காளை மாடு உள்ளிட்டவற்றுக்கு கழுத்து கயிறு, கருப்பு கயிறு உள்ளிட்டவை ஜோடி ரூ.50 முதல் விற்பனையானது.
சலங்கை வகைகள், ரூ. 30 முதல், 200 வரை கிடைக்கின்றன. 'பேன்சி' வகைகள் மட்டும் குஜராத் போன்ற வட மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகின்றன. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு விற்பனை நன்றாகவே உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.