/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமி பலி; சிறுத்தையை கண்காணிக்க கேமரா!
/
சிறுமி பலி; சிறுத்தையை கண்காணிக்க கேமரா!
ADDED : அக் 21, 2024 11:32 PM

வால்பாறை : வால்பாறையில், சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, கேமரா பொருத்தப்பட்டது.
வால்பாறை அடுத்துள்ள, ஊசிமலை மட்டம் எஸ்டேட்டில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அய்னுார் அன்சாரி, நசீரன்கத்துான் தம்பதி குடும்பத்துடன் தங்கி பணியாற்றுகின்றனர். இவர்களது, மகள் அப்சர்கத்துான்,4, 19ம் தேதி மதியம், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது, தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை சிறுமியை கவ்விச் சென்றது.
குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த தொழிலாளர்கள், தேயிலை செடிக்குள் குழந்தையை தேடினர். அப்போது, கழுத்து பகுதியில் காயத்துடன் குழந்தை இறந்து கிடந்தது. குழந்தையின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வனத்துறையினர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். முதல் கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனை, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி சிறுமியின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆறு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 12 பேர் கொண்ட வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குழந்தைகளை வெளியில் தனியாக விளையாடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, இரவு நேரத்தில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர் குடியிருப்பு பகுதியை சுற்றியுள்ள புதர்களை எஸ்டேட் நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு, கூறினர்.
எம்.எல்.ஏ.,ஆறுதல்
வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது,வால்பாறையில் வனவிலங்கு - மனித மோதலை தடுக்க, வனத்துறை போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் குடியிருப்பு பகுதியை சுற்றிலும், மின் வேலி அமைக்க வேண்டும்,' என்றார்.

