/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகாரிகளுக்கு இருசக்கர வாகனம் கொடுங்க.. மக்களின் கஷ்டம் புரியணும்! சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் ஆவேசம்
/
அதிகாரிகளுக்கு இருசக்கர வாகனம் கொடுங்க.. மக்களின் கஷ்டம் புரியணும்! சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் ஆவேசம்
அதிகாரிகளுக்கு இருசக்கர வாகனம் கொடுங்க.. மக்களின் கஷ்டம் புரியணும்! சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் ஆவேசம்
அதிகாரிகளுக்கு இருசக்கர வாகனம் கொடுங்க.. மக்களின் கஷ்டம் புரியணும்! சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் ஆவேசம்
ADDED : நவ 15, 2024 09:45 PM

பொள்ளாச்சி; 'அதிகாரிகள் ரவுண்ட்ஸ் செல்ல நான்கு சக்கர வாகனங்கள் வழங்க கூடாது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்களை அவர் களுக்கும் வழங்க வேண்டும். அப்போது தான் மக்கள் படும் கஷ்டம் அவர்களுக்கு புரியும்,' என, மறியலில் ஈடுபட்ட மக்கள் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக, பொள்ளாச்சி --- பாலக்காடு ரோடு உள்ளது. இந்த ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே, பொள்ளாச்சி --- போத்தனுார் ரயில் பாதை குறுக்கிடுகிறது. இங்கிருந்த, ரயில்வே கேட்டை கடப்பதற்கு, நான்கு வழி மேம்பாலம், 55.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்த, 2022ம் ஆண்டு கட்டப்பட்டது.
கடந்த மாதம், 15ம் தேதி மேம்பாலத்தில் சேதமடைந்த இரும்பு சட்டங்களை சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முழு அளவில் முடியாத நிலையில் கைவிடப்பட்டதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகினர்.
இரும்பு சட்ட பரா மரிப்பு பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என வலியுறுத்தி காங்., கட்சியின் மனித உரிமை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து, மரக்கன்று நட்டு நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினமும், இருசக்கர வாகனங்களில் வருவோர் கீழே விழுந்து காயமடைவது தொடர்கிறது.இந்நிலையில், மக்கள், கொ.ம.தே.க., வினர் இணைந்து பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், மறியலில் ஈடுபட்டனர். ரோட்டின் இருபுறமும் மறித்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்து அதிகரிப்பு
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக கூறி, குழியை தோண்டி மண்ணை மட்டும் கொட்டிச் சென்றனர்.கடந்த ஒன்றரை மாதமாக இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லை. அதிகாரிகளின் மெத்தன போக்கால் விபத்துகள் தினமும் நடக்கின்றன.
இதுபோன்று, பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாம்பாளையம் - தேர்நிலையம் வரை இரண்டு அடி குழி உள்ளது. இதில், சாகச பயணம் செய்யும் நிலை உள்ளது.
ஒவ்வொரு முறையும் ரோடுகளில் உயிர் பலி ஏற்பட்ட பின்னரே, சீரமைப்பு பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.இதற்குரிய தீர்வு காண வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தாலும் நடவடிக்கை இல்லை.
இனி அதிகாரிகள் ரவுண்ட்ஸ் செல்ல நான்கு சக்கர வாகனங்கள் வழங்க கூடாது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை அவர்களுக்கும் வழங்க வேண்டும். அப்போது தான் மக்கள் படும் கஷ்டம் அவர்களுக்கு புரியும். பொள்ளாச்சி பகுதியில் உள்ள ரோடுகளை சீரமைக்கவும், பாலத்தில் சீரமைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம்.
இவ்வாறு, கூறினர்.
அதிகாரிகள் சமரசம்
சம்பவ இடத்துக்கு வந்த கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, பொதுமக்கள், 'நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வர வேண்டும்,' என வலியுறுத்தினர்.
சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், 'பணிகளை நீங்கள் செய்கிறீர்களா; நாங்கள் செய்யட்டுமா என கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். அதன்பின், நாளை பணிகள் துவங்கப்படும் என தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.