/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையின் கோரிக்கைகளுக்கு 'பச்சைக்கொடி' காட்டுங்க! ரயில் பயனாளர்கள் சங்கம் எதிர்பார்ப்பு
/
கோவையின் கோரிக்கைகளுக்கு 'பச்சைக்கொடி' காட்டுங்க! ரயில் பயனாளர்கள் சங்கம் எதிர்பார்ப்பு
கோவையின் கோரிக்கைகளுக்கு 'பச்சைக்கொடி' காட்டுங்க! ரயில் பயனாளர்கள் சங்கம் எதிர்பார்ப்பு
கோவையின் கோரிக்கைகளுக்கு 'பச்சைக்கொடி' காட்டுங்க! ரயில் பயனாளர்கள் சங்கம் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 26, 2025 04:15 AM

கோவை : கோவை மக்களுக்கு தேவையான ரயில்களை இயக்க, பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்னும் நிர்வாகம் கண்டுகொள்ளாமலே உள்ளதாகவும், அதிகரித்து வரும் ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப, கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் எனவும், ரயில் பயனாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொழில் நகரமான கோவையில், வடமாநிலத் தொழிலாளிகள் மற்றும் பல்வேறு மாவட்ட மக்களும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும்போது, இவர்கள் படும் அவஸ்தை கொஞ்சம் நஞ்சமல்ல.
குறிப்பாக, தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பாடுதான் திண்டாட்டம். இதற்கு உதவியாக, கோவை - மதுரை இடையேயான மீட்டர் கேஜ் பாதையில், பல ரயில்கள் இயக்கப்பட்டன.
இதன் வாயிலாக, தென்மாவட்ட மக்கள் பயனடைந்து வந்தனர்.
அகல ரயில் பாதை மாற்றும் பணிக்காக, இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. பணிகள் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும், நிறுத்தப்பட்ட ரயில்களில் பல மீண்டும் இயக்கப்படவில்லை.
தெற்கு ரயில்வேயில், சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக வருவாய் ஈட்டித் தரும் ரயில்வே ஸ்டேஷனாக, கோவை சந்திப்பு இருந்து வருகிறது. ஆனால், கோவை ரயில்வே மீது சேலம் கோட்ட நிர்வாகம், எப்போதும் பாராமுகமாகவே இருந்து வருகிறது.
கோவையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு, ரயில் இயக்க கோரிக்கை விடுத்தும், அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கடந்த, 30 ஆண்டுகளாக கோவை - பெங்களூருவுக்கு இரவு ரயில் இயக்க, கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கோவை - ராமேஸ்வரம், கோவை - தூத்துக்குடி, கோவை - செங்கோட்டை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி ரயில்கள் தினசரி ரயில்களாக இயக்கப்பட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.
இந்த கோரிக்கைகள் குறித்து, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ரயில்களை இயக்கினால், ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைப்பது உறுதி.
போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன் கூறுகையில், ''மதுரை - கோவை, கோவை - மதுரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும். கோவை - சேலம் மெமு மின்சார ரயில், மீண்டும் இயக்கப்பட வேண்டும். மன்னார்குடி - கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் பெட்டிகளை பயன்படுத்தி, கோவையில் இருந்து போடிநாயக்கனூர் வரை ரயில் இயக்கப்பட வேண்டும். ஆனால், ரயில்வே அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித உத்தரவாதமும் தரவில்லை. கோவை மக்களின் நீண்டகால கோரிக்கைகளை, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்காவிடம் இது குறித்து கேட்டதற்கு, ''பயணிகள், ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் விடுக்கும் கோரிக்கைகளை, மேலிடத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அவர்கள் ரயில் இயக்கத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, அதன்படியே ரயில்களை இயக்குகின்றனர். அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். இருப்பினும், கோட்ட ரயில்வே துறை சார்பில், ரயில்கள் இயக்கத்துக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,'' என்றார்.
சீக்கிரமா முடிவு எடுத்து, ரயில்களை விடுங்க சார்!