/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருமூர்த்தி அணையிலிருந்து பாசன நீரை... குளங்களுக்கும் கொடுங்க!
/
திருமூர்த்தி அணையிலிருந்து பாசன நீரை... குளங்களுக்கும் கொடுங்க!
திருமூர்த்தி அணையிலிருந்து பாசன நீரை... குளங்களுக்கும் கொடுங்க!
திருமூர்த்தி அணையிலிருந்து பாசன நீரை... குளங்களுக்கும் கொடுங்க!
ADDED : நவ 19, 2025 03:59 AM
உடுமலை: திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாயின் அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது; இதே போல், இரு தாலுகாவிலும், நான்கு மண்டலத்துக்குட்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட குளங்களுக்கும் தண்ணீர் வழங்க விவசாயிகள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனம், நான்காம் சுற்றுக்கு பிரதான கால்வாயில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. பல்லடம் வாவிபாளையம் அருகே, பிரதான கால்வாய் உடைப்பால், நீர் நிர்வாகத்தில் பிரச்னை ஏற்பட்டது.
கோரிக்கை அடிப்படையில்... தாராபுரம் தாலுகா கெத்தல்ரேவ் பகுதியில் அமைந்துள்ள உப்பாறு அணைக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என, பல மாதங்களாக அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அரசூர் ஷட்டரில் இருந்து ஓடையில் தண்ணீர் திறந்தால், வழியோரத்திலுள்ள 25க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பும் என உப்பாறு ஓடை வழித்தட விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாய் அரசூர் ஷட்டர் வழியாக, கடந்த இரு நாட்களாக உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வினாடிக்கு 600 கன அடி வீதம், 5 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
தடுப்பணைகள் மற்றும் பராமரிப்பில்லாத ஓடையில் திறக்கப்பட்ட தண்ணீர், ஒரு வழியாக உப்பாறு அணையை எட்டியுள்ளது. நீண்ட இழுபறிக்குப்பிறகு உப்பாறு அணைக்கு பி.ஏ.பி., பாசன திட்டத்தில் தண்ணீர் வழங்கப்படுவதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் கவனியுங்க! உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், பி.ஏ.பி., பாசனத்துக்குட்பட்ட பகுதியில், நுாற்றுக்கணக்கான கிராம குளங்கள் உள்ளன. பருவமழை போதியளவு பெய்யாததால், பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
தற்போது பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம், நான்காம் சுற்று நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
ஆயக்கட்டு பகுதியில், பரவலாக மழை பெய்து வருவதால், பாசன நீரை குளங்களுக்கு வழங்க வேண்டும்; குளங்களை நிரப்பினால், பல மாதங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்படும். கோடை காலத்திலும் வறட்சி ஏற்படாது என தெரிவிக்கப்படுகிறது.
தகவல் தெரிவிக்கவில்லை விவசாயிகள் கூறியதாவது: பி.ஏ.பி., மண்டல பாசன காலத்தில், குளங்களில் தண்ணீர் நிரப்ப போராட வேண்டியுள்ளது. ஆயக்கட்டு பகுதியிலுள்ள குளங்களுக்கு முன்பு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தண்ணீர் வழங்கி வந்தனர்.
தற்போது பிரதான கால்வாயில் இருந்து உப்பாறு அணை, வட்டமலைக்கரை அணை உள்ளிட்ட அணைகளுக்கு எவ்வித அரசாணையும் இல்லாமல் தண்ணீர் வழங்குகின்றனர்.
ஆனால், ஆயக்கட்டு பகுதியிலுள்ள குளங்களில் தண்ணீர் நிரப்புவதில்லை. தற்போதைய தருணத்தில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள அனைத்து கிராம குளங்களுக்கும் தண்ணீர் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். உப்பாறு உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் திறப்பு குறித்து, பொதுப்பணித்துறையினர் வெளிப்படையாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

