/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை விறுவிறுப்பு
/
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை விறுவிறுப்பு
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை விறுவிறுப்பு
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை விறுவிறுப்பு
ADDED : ஜூன் 06, 2025 12:33 AM

பொள்ளாச்சி; பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே, வாரந்தோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. இங்கு, பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, நெகமம், திண்டுக்கல், பழநி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் செம்மறியாடு, வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
வெளியூர்களில் இருந்து வியாபாரிகள், ஆடுகள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த மாதத்தில், கடந்த, இரண்டு வாரமாக பரவலான மழையால் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. மொத்தம், 300 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன.
இந்நிலையில், நேற்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதால், சந்தை களைகட்டியது.
உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி, கேரளா வியாபாரிகளும் அதிகளவு வந்தனர். இதனால், ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனையாகியது. பெரிய ஆட்டு கிடா வகைக்கு கிராக்கி இருந்தது.
கடந்த வாரத்தில், அதிகபட்சமாக, 30 கிலோ எடை கொண்ட ஆடு, 23 ஆயிரம் ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று செம்மறி மற்றும் வெள்ளாடு, 28 ஆயிரம் ரூபாய் வரையிலும், கிடா, 35 ஆயிரம் ரூபாய் முதல், 38 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையாகியது. ஒரே நாளில், இரண்டு கோடி ரூபாய் வரை ஆடு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.