/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எழுத்தறிவிப்பவள் இறைவி...! கல்வி கற்பிக்கிறார் கங்கா!
/
எழுத்தறிவிப்பவள் இறைவி...! கல்வி கற்பிக்கிறார் கங்கா!
எழுத்தறிவிப்பவள் இறைவி...! கல்வி கற்பிக்கிறார் கங்கா!
எழுத்தறிவிப்பவள் இறைவி...! கல்வி கற்பிக்கிறார் கங்கா!
ADDED : நவ 03, 2024 10:44 PM

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது அந்தக் குடியிருப்பு. குடியிருப்பு என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது போல் அல்ல. அங்கொன்றும் இங்கொன்றுமாய், சற்றே சமவெளியிலும், மலை இடுக்குகளிலும் ஓலை அல்லது தகரம் வேய்ந்த குடிசைகள். சில குடிசைகள் முழுமை பெறாதவை.
அதில் ஒரு குடிசை புதிதாக தகரம் வேயப்பட்டிருந்தது. அதற்குள் நுழைந்தோம். குழந்தைகளுக்கு கற்பிக்கும் அட்டைகள், உலக, இந்திய வரைபடங்கள், தமிழ், ஆங்கில எழுத்துகள், அறிவியல், கணித வடிவங்கள் அடங்கிய சுவர் அட்டைகள் தொங்கிக் கொண்டிருந்தன. ஓரத்தில், தையல் இயந்திரம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
அது, அந்தக் குடியிருப்பின் டியூசன் சென்டர்.
மின்சாரமே பார்த்திராத அந்தக் குடியிருப்பின் பெயர் நாகரூத்து -2. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் 38 மலசர் பழங்குடி மக்கள் குடும்பம் அங்கு வசிக்கிறது. நவீன உலகம் ஒரு நுாற்றாண்டுக்கு முன்பே கொண்டிருந்த அடிப்படை வசதியில் இன்றுவரை ஒன்றுகூடஇல்லாத பகுதி. மிகச்சமீபத்தில்தான், மத்திய அரசின் நலத்திட்ட உதவியாய் ரேடியோ கிடைத்திருக்கிறது. இது, அவர்களின் அதிகபட்ச வசதி.
அந்த பழங்குடி மக்களின் குழந்தைகள் படிக்க, மலையில் இருந்து கீழே இறங்கி, காண்டூர் கால்வாய் கடந்து, மன்னம் வழியாக சேத்துமடை வர வேண்டும். யாரேனும் பெரியவர்கள் தினமும் நடந்து கொண்டு வந்து விட்டு, மீண்டும் மாலையில் அழைத்துச் செல்ல வேண்டும். மழை பெய்தால் அன்று விடுமுறை.
10ம் வகுப்புக்கு மேல் படிக்க முடிவதில்லை. ஆண்டின் பாதி நாட்களைக் கடந்து பள்ளி சென்றாலே அதிகம் என்ற நிலையில்தான் பெரும்பாலான குழந்தைகள் பள்ளி செல்கிறார்கள்.
இக்குழந்தைகளுக்கு டியூசன் எடுக்கிறார் அதே பழங்குடி இனத்தைச் சேர்ந்த கங்கா. அக்குடியிருப்பின் ஒரே பட்டதாரிப் பெண்.
ஒரு தன்னார்வ அமைப்பு உதவ முன்வர, நாகரூத்து பழங்குடியின குடியிருப்பு குழந்தைகளுக்கு, மாலை நேரத்திலும், அவர்கள் பள்ளி செல்லா சமயங்களிலும் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறார். அப்பகுதி இளம்பெண்கள் சிலருக்கு தையல் கலையும் கற்றுக் கொடுக்கிறார்.
அவரிடம் பேசினோம்...
வால்பாறை அரசு கலலுாரியில் இளங்கலை ஆங்கிலம் படித்தேன். இந்தக் குடியிருப்பின் முதல் பட்டதாரி நான்தான். இங்கிருந்து பள்ளி செல்வது அவ்வளவு எளிதில்லை. சிறு குழந்தைகள் நடக்க இயலாது. ஒன்றிணைந்துதான் சமவெளிக்கு இறங்கிச் செல்ல வேண்டும் என்பதால், யாரேனும் ஒரு சிலர் விடுப்பு எடுத்தால் மற்றவர்களும் விடுப்பு எடுக்க வேண்டி இருக்கும்.
பெண் குழந்தைகள் உட்பட நான்கைந்து பேர் 10ம் வகுப்பு படிக்கின்றனர். அவர்களை பெற்றோர் காலையில் உடன் சென்று விட்டுவிட்டு, அங்குள்ள தோட்டங்களில் வேலை செய்வர். பின், மாலை அழைத்து வருவர். கீழே வேலை இல்லாவிட்டால், மலைக்கு ஏறி வந்து, அவர்களின் மலைத்தோட்டத்தில் வேலை செய்வர். பின் மீண்டும் சென்று அழைத்து வருவர். நம் குழந்தைகளும் படிக்கட்டுமே என்றுதான் இவ்வளவு கஷ்டமும்.
இக்குழந்தைகளுக்கு நான் டியூசன் எடுக்கிறேன். ஒரு தன்னார்வ அமைப்பு இதற்காக உதவுகிறது. நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், கற்றல் வழிகாட்டிகளை அவர்கள் வாங்கிக் கொடுக்கின்றனர். இந்த குடிசையையும் அவர்கள் உதவியோடுதான் அமைத்தோம்.
பெண் குழந்தைகளை, விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க எம் மக்களுக்கு பயம்.
அரசு பாதுகாப்பான விடுதி வசதி, பழங்குடி மக்களைப் பாதிக்காத உணவு கொடுத்தால், இன்னும் சில பட்டதாரிகள் இங்கிருந்து உருவாக வாய்ப்புள்ளது.அதுவரை இவர்களுக்கு என்னால் இயன்றதைக் கற்றுக் கொடுப்பேன். நான் கற்ற கல்வி என் மக்களுக்குப் பயன்படுவதை விட வேறென்ன மகிழ்ச்சி இருந்துவிடப்போகிறது.
கல்வி தந்த உறுதியோடும், பழங்குடி குழந்தைகளை எப்படியாவது அடுத்தகட்டத்துக்கு நகர்த்திவிட மாட்டோமா என்ற ஆதங்கத்தோடும் பகிர்ந்து கொண்டார் அந்த இறைவி. எழுத்தறிவித்தவள் இறைவியல்லவா!