/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலர் மலர் பொருட்கள் ஏற்றுமதிக்கு நல்வாய்ப்பு
/
உலர் மலர் பொருட்கள் ஏற்றுமதிக்கு நல்வாய்ப்பு
ADDED : ஆக 07, 2025 09:44 PM

கோவை; உலர் மலர்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பொருட்களுக்கு, உள்நாட்டு சந்தையிலும், ஏற்றுமதியிலும் பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதால், தொழில்முனைவோராக விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என, வேளாண் பல்கலை மலரியல் துறை அழைப்பு விடுத்துள்ளது.
உலர் மலர்கள் துறையில் தொழில்முனைவு வாய்ப்புகள் குறித்து, வேளாண் பல்கலை, மலரியல் மற்றும் நிலம் எழிலுாட்டும் துறை இணைப் பேராசிரியர் தாமரைச் செல்வி கூறியதாவது:
உலர் மலர்கள் என்பது உலர்ந்த மலர்கள் மட்டும் அல்ல. மரம், செடி, கொடியின் நுனி முதல் வேர் வரை, இலை முதல் காய் வரை அனைத்துப் பாகங்களையும் பயன்படுத்தி, மலர்க்கொத்துகள், அலங்காரப் பொருட்களை உருவாக்குவது.
இதில் மூன்று முக்கிய கட்டங்கள் உள்ளன. பொருளுக்கேற்ற பாகங்களைத் தேர்வு செய்வது, பிளீச் செய்வது, நிறமேற்றுவது. உதாரணமாக மரப்பட்டையைப் பயன்படுத்த நினைத்தால், சரியான பட்டையைத் தேர்வு செய்து, பின் பிளீச் செய்து, தேவையான நிறமேற்ற வேண்டும்.
உலர் மலர்களால் செய்த, மலர்க்கொத்துகள், அலங்கார பரிசுப் பொருட்கள், அணிகலன்களை ஆண்டுக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம். உலர் மலர் அலங்காரப் பொருட்களை வீடு, அலுவலக மேஜை, கார்ப்பரேட் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை அழகுபடுத்தவும் பயன்படுத்தலாம். வீடுகளில் ஷோ கேஸ் போன்ற இடங்களில் காட்சிப் படுத்தலாம். போட்டோ பிரேம் போன்று சுவர்களிலும் மாட்டலாம்.
துாத்துக்குடி, திருச்சியில் உலர் மலர் உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இதற்கான சந்தைத்தேவை உள்நாட்டிலும் அதிகம். ஏற்றுமதி வாய்ப்புகளும் ஏராளம் உள்ளன.
உலர் மலர்கள் சார்ந்த பயிற்சி, வழிகாட்டல்களை வழங்க, வேளாண் பல்கலை மலரியல் மற்றும் நிலம் எழிலுாட்டும் துறை தயாராக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 0422 6611230 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.