/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை விவசாயத்தில் பெறலாம் நல்ல லாபம்! நம்பிக்கை தருகிறார் மாதம்பட்டி விஜயன்
/
இயற்கை விவசாயத்தில் பெறலாம் நல்ல லாபம்! நம்பிக்கை தருகிறார் மாதம்பட்டி விஜயன்
இயற்கை விவசாயத்தில் பெறலாம் நல்ல லாபம்! நம்பிக்கை தருகிறார் மாதம்பட்டி விஜயன்
இயற்கை விவசாயத்தில் பெறலாம் நல்ல லாபம்! நம்பிக்கை தருகிறார் மாதம்பட்டி விஜயன்
ADDED : ஏப் 09, 2025 10:39 PM

கோவை; ''இயற்கை விவசாய முறையில் காய்கறி விளைவித்து, நல்ல லாபம் பெறலாம். அனைவரும் ரசாயன உரம் தவிர்த்து, இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள்,'' என விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் கோவை மாதம்பட்டியை சேர்ந்த விவசாயி விஜயன்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், எம்.ஈ., வெல்டிங் தொழில்நுட்பம் படித்து முடித்து, 8 ஆண்டுகள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின், இயற்கை விவசாயம் மீது நாட்டம் ஏற்பட்டது. அதற்கான தேடுதலை துவங்கி, இன்று வெற்றி பெற்று நிற்கிறார்.
அவருடன் ஒரு நேர்காணல்...
முதலில் எப்படி துவங்கினீர்கள்?
முதலில் ரசாயன உரங்களை பயன்படுத்தி, பயிர்களுக்கு தேவையான சத்துகளை எப்படித் தருகிறார்கள் எனத் தெரிந்து கொண்டேன். அதை, மாற்று முறையில் பூர்த்தி செய்ய முடியுமா எனத் தேடி, இயற்கை இடுபொருட்களை வாங்கி, இயற்கை விவசாயம் செய்ய துவங்கினேன். தற்போது, 3 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாக செய்து வருகிறேன்.
எத்தனை காய்கறி ரகங்களை பயிரிட்டீர்கள்?
இயற்கை விவசாயத்தில், முதலில் எந்தெந்தப் பயிர்களுக்கு என்னென்ன சத்துகள் தேவை என்பதை அறிந்து கொண்டேன். பின், அதிக தேவையுள்ள பயிர்களை விளைவிக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டேன். எங்கள் பகுதியில் அவற்றை பயிரிட்டேன்.
ஒரு ஏக்கரில், முதலில் 30 சென்ட் பயிரிட்டேன். பின் விற்பனை வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு, 50 சென்டாக விவசாயப் பரப்பளவை அதிகரித்து, பின், ஒரு ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன்.ஒரே காய்கறியை நம்பியிருக்காமல், பல காய்கறி பயிரிட்டால் தான் எளிதாக விற்று, லாபம் ஈட்ட முடியும். அதேபோல், இயற்கை விவசாயத்தால் மட்டுமே, நுகர்வோர்களுக்கு ரசாயனக் கலப்பற்ற, சத்தான காய்கறி கிடைக்கும்.
இயற்கை விவசாயத்துக்கு அதிக நாட்கள் ஆகுமே?
இயற்கை முறையில் விவசாயம் செய்தால், விளைச்சல் பெற 3 ஆண்டுகளாகும் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளது. மண்வளம் மேம்பட மட்டுமே, 3 ஆண்டுகள் தேவைப்படும். மண்ணில் இருந்து இயற்கை விளைபொருட்களை உற்பத்தி செய்ய, 3 ஆண்டுகள் தேவைப்படாது. பண்ணை, முதலில் தனது தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின், விவசாயியின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு தான், விற்பனை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
இடுபொருட்கள் தயாரிப்பு பற்றி?
பண்ணைக்கு தேவையான இடுபொருட்களை பண்ணையிலேயே உருவாக்க ஆரம்பித்தோம். அதற்காக, மண்புழு உரம், தொழு உரம் போன்ற இடுபொருட்களை தயாரித்தோம். இதற்கான நுட்பத்தை, ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் பல்வேறு யூடியூப் சேனல்கள் வாயிலாக கற்றேன்.
இத்துடன் ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யா, மீன் அமிலம் உட்பட இடுபொருட்களையும் நாங்களே தயாரித்தோம்.
சக விவசாயிகளுக்கு சொல்ல விரும்பும் தகவல்?
ஒரு ஏக்கரில், ஆண்டுக்கு 3 வகையான காய்கறி பயிரிடலாம். அதைத் தாண்டி ஊடுபயிர்கள் பயிரிட்டால், ஒரே சமயத்தில் இரு லாபம் பெற முடியும். என் நிலத்தில் துணை நடவுமுறையைப் பயன்படுத்தி, பப்பாளி, வாழை, முருங்கை ஆகிய 3 பயிர்களை வைத்துள்ளேன்.
இதில் முருங்கை, நிலத்துக்கு நைட்ரஜன் தரும். அது வாழைக்கும், பப்பாளிக்கும் உதவும். இதுபோல், சூரிய வெளிச்சத்துக்கும், சத்துகளுக்கும் போட்டியில்லாத பயிர்களைக் கலந்து வைத்தால், நம்மால் நிரந்தர லாபம் ஈட்ட முடியும்.
ஒரு ஏக்கரில் 3 பயிர்கள் இருப்பதால், இது மிகுந்த லாபகரமாக இருக்கும். பூச்சிக்கொல்லி, ரசாயன உரமில்லாத காய்கறியை, நுகர்வோர்களுக்கு தருவதால் திருப்தி ஏற்படுகிறது. இயற்கை விவசாயத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்.