/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தில் 'பறக்கும்' அரசு, தனியார் பஸ்கள்; பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் பயணியர் அவதி
/
மேம்பாலத்தில் 'பறக்கும்' அரசு, தனியார் பஸ்கள்; பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் பயணியர் அவதி
மேம்பாலத்தில் 'பறக்கும்' அரசு, தனியார் பஸ்கள்; பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் பயணியர் அவதி
மேம்பாலத்தில் 'பறக்கும்' அரசு, தனியார் பஸ்கள்; பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் பயணியர் அவதி
ADDED : டிச 18, 2024 08:18 PM

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி -- கோவை இடையே இயங்கும் சில தனியார் மற்றும் அரசு பஸ்கள், கிணத்துக்கடவில் நிற்காமல் செல்வதால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி ---- கோவை இடையே, போக்குவரத்து நிறைந்த பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதில், முள்ளுப்பாடியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை தவிர்த்து, கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி மேம்பாலங்களில் சர்வீஸ் ரோடு வழியாக பஸ்கள் இயக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், சர்வீஸ் ரோடு வழியாக செல்லாமல், மேம்பாலத்தில் செல்வதால், சர்வீஸ் ரோடு மார்க்கத்தில் உள்ள பஸ் ஸ்டாப்களில் பயணியர் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில், புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாப் உள்ளது.
இப்பகுதியில், பஸ் நிற்க 'ஸ்டேஜ்' இருந்தும் நேரமின்மை காரணமாக, சில அரசு மற்றும் தனியார் பஸ்கள் மேம்பாலத்தில் செல்கின்றன. இதனால், பயணியர் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்தும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர், கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளுக்கு செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும், கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் போக்குவரத்தை நம்பி பயணிக்கின்றனர்.
இதில் பெண்கள் பலர் இரவு நேரத்தில், கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிணத்துக்கடவு டிக்கெட் கேட்டால், கிணத்துக்கடவுக்கு பஸ் செல்லாது, மேம்பாலத்தில் சென்று விடும் என கூறி, பஸ்சில் இருந்து இறக்கி விடுகின்றனர். இதனால், பயணியருக்கு சிரமம் ஏற்படுகிறது. அதையும் மீறி கிணத்துக்கடவில் பயணியர் இறக்க வேண்டுமானால், மேம்பாலம் துவங்கும் இடத்தில் இறக்கி விடப்படுகின்றனர்.
இதுகுறித்து, ஆர்.டி.ஓ., அலுவலகம் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும், பொதுமக்கள் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர். இருந்தாலும், பொதுமக்களின் கஷ்டங்களுக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.
இனிமேலாவது, பஸ்கள் மேம்பாலத்தில் செல்லாமல், சர்வீஸ் ரோடு வழியாக சென்று பஸ் ஸ்டாப் மற்றும் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஸ்டாப்களில் பஸ் நிற்காமல் சென்றால், அந்த பஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் பஸ்களின் 'பர்மிட்' தற்காலிகமாக ரத்து செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த தயாராக உள்ளோம், என்கின்றனர் பயணியர்.