/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதுமார்க்கெட் பகுதியில் நெருக்கடிக்கு தீர்வு ரூ.9 கோடியில் வணிக வளாகம் கட்ட அரசு அனுமதி
/
புதுமார்க்கெட் பகுதியில் நெருக்கடிக்கு தீர்வு ரூ.9 கோடியில் வணிக வளாகம் கட்ட அரசு அனுமதி
புதுமார்க்கெட் பகுதியில் நெருக்கடிக்கு தீர்வு ரூ.9 கோடியில் வணிக வளாகம் கட்ட அரசு அனுமதி
புதுமார்க்கெட் பகுதியில் நெருக்கடிக்கு தீர்வு ரூ.9 கோடியில் வணிக வளாகம் கட்ட அரசு அனுமதி
ADDED : ஏப் 14, 2025 04:28 AM

வால்பாறை : வால்பாறை, புதுமார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை புதுப்பிக்கும் வகையில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிகவளாகம் கட்ட தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான, 300க்கும் மேற்பட்ட கடைகள் மாத வாடகை அடிப்படையில் செயல்படுகின்றன. இது தவிர, மார்க்கெட் நுழைவுவாயிலில் இருந்து மீன் மார்க்கெட் வரை, ஆக்கிரமிப்புக்கடைகளும் அதிக அளவில் உள்ளன. இது தவிர, மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்தும் கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால், அவசரத்தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சி இடத்தை பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து, பல ஆண்டுகளாக கடைகள் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்றக்கோரி, மக்கள் பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்காததால், ஆக்கிரமிப்புக்கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், நகராட்சிக்கு மாதம் தோறும் வாடகை செலுத்தும் கடை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தியும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சட்டசபையில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு, வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய வணிக வளாகம், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் கட்டப்படும் என்றார்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
அமைச்சர் அறிவித்த படி, மார்க்கெட் பகுதியில் நவீன முறையில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி விரைவில் துவங்கப்படும். பணி துவங்கும் முன், மார்க்கெட் பகுதியில் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்படும்.
அவர்களுக்கு, சிறுவர் பூங்கா விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக மாற்று இடம் வழங்கப்படும். வணிக வளாகம் கட்டும் பணியின் போது, தற்போது உள்ள நகராட்சி கடைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும்.
வணிக வளாகத்தில் பூமார்க்கெட், காய்கறிக்கடை, மளிகை கடைகள், பேக்கரி போன்றவைகளுக்கு தனித்தனியாக கடைகள் கட்டப்படும். பணி முழுவதுமாக நிறைவடைந்த பின், வியாபாரிகளுக்கு 'டோக்கன்' அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு, கூறினர்.