/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை பம்ப் உற்பத்தி தொழிலை கைதுாக்கி விடு அரசே! உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்!
/
கோவை பம்ப் உற்பத்தி தொழிலை கைதுாக்கி விடு அரசே! உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்!
கோவை பம்ப் உற்பத்தி தொழிலை கைதுாக்கி விடு அரசே! உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்!
கோவை பம்ப் உற்பத்தி தொழிலை கைதுாக்கி விடு அரசே! உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்!
ADDED : டிச 06, 2024 11:40 PM

கோவை; மோட்டார் பம்ப் உற்பத்தியில், 30 ஆண்டு களுக்கு முன் இந்தியாவிற்கே 75 சதவீதத்தை தயாரித்து அளித்து வந்தது கோவை. இது படிப்படியாக குறைந்து தற்போது 40 சதவீதமாகி விட்டது. குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பம்ப் உற்பத்தி துவக்கப்பட்டதால், கோவையில் பங்களிப்பு குறைந்து வருகிறது.
குஜராத்தில் அரசு தரும் சலுகைகள், அங்கு பம்ப் உற்பத்தியை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அரசு தந்த ஊக்கத்தால், 10 கோடி மதிப்பிலிருந்த பம்ப் உற்பத்தி, 5 மடங்கு 50 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆனால், கோவையில் பம்ப் தொழில் நிறுவனங்கள், பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களான ஸ்டீல், காப்பர், நிலக்கரி உள்ளிட்டவற்றின் விலை, நிலையாக இருந்தபோதிலும், பம்ப் விலையில் குஜராத்துடன் போட்டியிட இயலவில்லை.
கோவையில் பம்ப் உற்பத்தியை அதிகரிக்கவும், பம்ப் தொழிலை காக்கவும் தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்கத்தின் (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ் கூறியதாவது:
இந்திய அளவில் மழை பொழிவுக்கு ஏற்றவாறு, பம்ப் உற்பத்தியும் மாறுபடும். மழை அளவு அதிகரித்தால், விவசாயத்துக்கான பம்ப் விற்பனை குறையும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். கடந்த ஆண்டில் பம்ப் விற்பனை, கோவையை பொறுத்தவரை 10 சதவீதம் வரை குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் மழை அளவு, தற்போது சராசரியை விட, 7 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், பம்ப் விற்பனை மந்தமாக உள்ளது. அடுத்த ஆண்டு 3 மாதங்களுக்கு இது உயரும்.
குஜராத் மாநிலத்தில், பம்ப் உற்பத்திக்கு பல்வேறு சலுகைகளை அரசு அளித்து வருகிறது. நிலம் வாங்குவது முதல், மின்சாரம், ஆள் தேவை போன்றவைகளுக்கும் அரசு உதவுகிறது.
ஸ்டீல் மிக அருகில் கிடைப்பதால், போக்குவரத்து செலவும் குறைவாக உள்ளது. சந்தையில் குஜராத் பம்ப் விலை, கோவை பம்ப்களின் விலையை விட குறைவாகவே உள்ளதால், அவற்றை விவசாயிகள் வாங்குகின்றனர்.
இதனால், கோவையில் பம்ப் உற்பத்தி தொழிற்சாலைகள், குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், 25 சதவீத அளவிற்கு நலிவடைந்து விட்டதாக வருந்துகின்றனர் உற்பத்தியாளர்கள்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
கோவையின் முன்னுரிமை தொழிலாக, பம்ப் தொழிலை அரசு அறிவிக்க வேண்டும். குஜராத் அரசு வழங்குவது போன்று, புதியதாக பம்ப் தொழிற்சாலை துவங்குவோருக்கு மூலதன சலுகை, மானியம் தர வேண்டும்.
பம்ப் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களான ஸ்டீல், காப்பர் போன்றவைகளை மொத்தமாக கொள்முதல் செய்து பயன்படுத்த, கிடங்கு ஒன்றை அமைக்க வேண்டும். இதில், இருப்புக்கு ஏற்ப, வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும்.
சீனாவின் ஸ்டீல் இறக்குமதி மீதான பொருள் குவிப்புக்கு எதிரான வரியை அமல்படுத்தக்கூடாது. அவ்வாறு, பொருள் குவிப்புக்கு எதிரான வரியை (ஆன்ட்டி டம்ப்பிங் டூட்டி) அமல்படுத்தினால், உள்நாட்டிலும் விலை ஏற்றம் வரும். இவற்றை தவிர்க்க வேண்டும்.
குஜராத்தில் பம்ப் உற்பத்தி அதிகரித்து வருவதால், அங்குள்ள நிலைக்கு ஏற்ப தமிழக அரசும் சலுகை அளித்தால் மட்டுமே, கோவை பம்புகளும் குஜராத் பம்புகளுடன் விற்பனையிலும், விலையிலும் போட்டியிட முடியும்.
இந்த கோரிக்கைகளை, மத்திய அமைச்சர் குமாரசாமியையும், மாநில அமைச்சர்களையும் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.