/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்சி மாற்றம் உறுதி; எம்.எல்.ஏ., ஜெயராமன் பேச்சு
/
ஆட்சி மாற்றம் உறுதி; எம்.எல்.ஏ., ஜெயராமன் பேச்சு
ADDED : ஆக 13, 2025 08:28 PM

பொள்ளாச்சி; ''தி.மு.க. ஆட்சி முடிய ஆறு அமாவாசை தான் உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
அ.தி.மு.க. சார்பில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துகருப்பண்ணசாமி, சக்திவேல், பாப்பு திருஞானசம்பந்தம், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். பா.ஜ., மாவட்ட தலைவர் சந்திரசேகர், த.மா.கா., மாவட்ட தலைவர் குணசேகரன் உள்பட பலர் பேசினர்.
எம்.எல்.ஏ., தாமோதரன் பேசுகையில், ''நகராட்சியில் பொது இடங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதால், பொது இடங்களே இல்லாத நிலை ஏற்படும். பொல்லாத தி.மு.க., ஆட்சிக்கு, பொள்ளாச்சி நகராட்சியே உதாரணமாக உள்ளது. தி.மு.க., ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை,'' என்றார்.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்து பேசியதாவது: அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு முழுமையாக வழங்கவில்லை. இணைப்பு வழங்க லஞ்சம் பெறப்படுகிறது.
தமிழகத்திலேயே அதிகளவு வரி விதிக்கப்படும் நகராட்சியாக பொள்ளாச்சி உள்ளதால் மக்கள் பாதிக்கின்றனர்.
பழைய கட்டடங்களை கண்டறிந்து அவற்றுக்கு கூடுதல் வரி விதிப்பதாக கூறி அதிகளவு லஞ்சம் பெறுகின்றனர். குப்பை முறையாக துார்வாரப்படாமல் நகரமே நாறுகிறது.
தி.மு.க.கவுன்சிலர்களே, நகராட்சி கூட்டத்தில் வெளிநடப்பு செய்தனர். லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரகுபதி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் விஜயகுமார், கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, நிர்வாகிகள் அருணாச்சலம், கனகராஜ், ராஜ்கபூர் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், ''தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் நிம்மதி இல்லை. கொலை, கொள்ளைகள் அன்றாட சம்பவங்களாகி விட்டது. இன்னும் இந்த ஆட்சி முடிய ஆறு மாதங்கள், அதாவது, ஆறு அமாவாசைகள் தான். அதன்பின், ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து, முதல்வராக பழனிசாமி பதவியேற்றதும், மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்,'' என்றார்.