/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு ஆற்றில் கலக்கும் கழிவுநீர் அதிகரிப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கும் அரசுத்துறைகள்
/
ஆழியாறு ஆற்றில் கலக்கும் கழிவுநீர் அதிகரிப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கும் அரசுத்துறைகள்
ஆழியாறு ஆற்றில் கலக்கும் கழிவுநீர் அதிகரிப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கும் அரசுத்துறைகள்
ஆழியாறு ஆற்றில் கலக்கும் கழிவுநீர் அதிகரிப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கும் அரசுத்துறைகள்
ADDED : ஜன 28, 2024 09:26 PM
ஆனைமலை;ஆனைமலை ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள, ஆற்றில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி, ஆனைமலை ஒன்றியம், பொள்ளாச்சி நகராட்சி, வழியோர கிராமங்களை உள்ளடக்கிய குடிநீர் திட்டம், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு உள்ளிட்ட 64 கிராமங்கள், பெரிய நெகமம், கிணத்துக்கடவு பேரூராட்சி பயன்பெறும் வகையில், 13 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி நகரம், தெற்கு, வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்துார் உள்ளிட்ட பகுதி மக்கள்,குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
மக்களுக்கு மட்டுமின்றி, கால்நடைகளுக்கு நீராதாரமாக உள்ள ஆழியாறு ஆறு கழிவுநீர் கலந்து வருகிறது. ஆழியாறு ஆற்றில், பேரூராட்சிகளின் கழிவுநீர், கழிப்பிட நீர் என கலப்பதால், ஆற்றுநீர் மாசடைந்து ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. கழிவுகளும் அளவுக்கு அதிகமாக கலப்பதால் நீர் மாசடைந்து, ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது.
நடவடிக்கை தான் இல்லை
கழிவுநீர் நேரடியாக அளவுக்கு அதிகமாக ஆற்றில் கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசுத்துறைகளாக சென்று அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மனு கொடுத்தனர்.
ஆனாலும், அதிகாரிகள், 'ரெடிமேட்' பதிலாக, நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அனுப்புகின்றனர். பதவிக்காலம் முடிந்து அதிகாரிகள் மாறிச் சென்றாலும் இந்த 'ரெடிமேட்' பதில் மட்டும் மாறுவதில்லை.
தீர்வே இல்லாமல் உள்ள நீண்ட கால பிரச்னை தற்போது அரசியல் வாதிகளின் தேர்தல் வாக்குறுதியாக மாறியுள்ளது. வெற்று வாக்குறுதியாக இல்லாமல், இந்த பிரச்னை எப்போது தான் தீரும் என எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.
தீர்வு கிடைக்குமா?
அரசுத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு துறையை கை காட்டி பொறுப்பை தட்டிக்கழிப்பதை விட்டு, பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து ஆலோசிக்க வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.