/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குதிரைவண்டி கோர்ட்டுக்கு அரசு டெப்போ இடம்: கலெக்டருக்கு நீதித்துறை கடிதம்
/
குதிரைவண்டி கோர்ட்டுக்கு அரசு டெப்போ இடம்: கலெக்டருக்கு நீதித்துறை கடிதம்
குதிரைவண்டி கோர்ட்டுக்கு அரசு டெப்போ இடம்: கலெக்டருக்கு நீதித்துறை கடிதம்
குதிரைவண்டி கோர்ட்டுக்கு அரசு டெப்போ இடம்: கலெக்டருக்கு நீதித்துறை கடிதம்
ADDED : நவ 05, 2025 12:06 AM

கோவை: குதிரை வண்டி கோர்ட் வளாகத்திற்கு, அருகிலுள்ள அரசு போக்குவரத்து கழக இடத்தை ஒதுக்க, நீதித்துறை நிர்வாகம் சார்பில் கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு கலைக்கல்லுாரி ரோட்டிலுள்ள, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 47 க்கும் மேற்பட்ட கோர்ட்கள் செயல்பட்டு வருகின்றன. 10 ஏக்கர் பரப்புடைய இந்த வளாகத்தில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றங்களை வேறு இடங்களுக்கு மாற்றினால், கோர்ட் வளாகத்தில் இடப்பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, கோவை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள, குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில், 14 நீதிமன்றங்கள் செயல்படும் வகையில் நான்கு தளம் கொண்ட, புதிய கட்டடம் கட்ட 54.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த மார்ச்சில், புதிய கோர்ட் கட்டட அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கியது. இரண்டு தளம் வரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து நீதிமன்றங்கள் திறக்கப்பட்டால், இந்த வளாகத்திலும் வாகனங்கள் அதிகளவில் நிறுத்த முடியாமல்,மேலும் இட நெருக்கடி ஏற்படும்.
குதிரை வண்டி கோர்ட்டிற்கு செல்லும் வழியான, ஜி.டி.பள்ளி ரோடு மற்றும் அவிநாசி ரோடு மேம்பாலம் ஒட்டியுள்ள சாலை குறுகலான பகுதியாகும். வாகனங்கள் வந்து திரும்புவதில் சிக்கல் ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டு, இந்த வளாகத்தை ஒட்டி செயல்படும், அரசு போக்குவரத்து கழக பணிமனையை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, அந்த இடத்தை நீதித்துறை நிர்வாகத்துக்கு ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட கலெக்டருக்கு, நீதித்துறை நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு போக்குவரத்து டெப்போ இடத்தை, குதிரை வண்டி கோர்ட் வளாகத்திற்கு ஒதுக்கும் பட்சத்தில், அவிநாசி ரோடு மேம்பாலம் ஒட்டிய குறுகலான சாலையின் தெற்கு பகுதியில், இரண்டு வாசல் அமைக்கலாம். குதிரை வண்டி கோர்ட்டிற்கு வாகனங்கள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் வசதியாக இருக்கும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும்.
அரசு போக்குவரத்து டெப்போ மாற்றப்பட்டால், குறுகலான ரோட்டில் டெப்போவிற்கு செல்லும் அரசு பஸ் போக்குவரத்து குறைந்து, வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

