/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் பழைய ஓய்வூதியம்; அரசு ஊழியர்கள் கோரிக்கை
/
மீண்டும் பழைய ஓய்வூதியம்; அரசு ஊழியர்கள் கோரிக்கை
ADDED : மே 12, 2025 11:25 PM

பெ.நா.பாளையம்; மீண்டும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் பெரியநாயக்கன்பாளையம் கிளை ஆண்டு பேரவை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாதிகளின் கோரத்தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளைத் தலைவர் மயில்சாமி வரவேற்றார்.
மத்திய, மாநில பொதுத்துறைகளின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணன், கோவை மாவட்ட தலைவர் பலராமன், மாநில செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் மீண்டும் பழைய ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து பேசினர். பேராசிரியர் வேலுசாமி, செல்லப்பன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர்.
கூட்டத்தில், கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பெரியநாயக்கன்பாளையத்தில் எல்.எம்.டபிள்யூ., துவங்கி, ஜோதிபுரம் வரையிலான மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும். வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும். வீரபாண்டி, புதுப்பாளையம் ஆகிய இடங்களில் பாசஞ்சர் ரயில் நிறுத்தம் வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், 80 வயது நிறைவு பெற்றவர்களுக்கு கதர் துண்டு அணிவித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இணை செயலாளர் வீரலட்சுமி நன்றி கூறினார்.